திருப்பதி:
திருப்பதி அருகே லாரியில் சென்றுகொண்டிருந்த தமிழர்கள் 84 பேரை ஆந்திர மாநில போலீசார் அதிடியாக கைதுசெய்துள்ளனர்.
அவர்கள் செம்மரம் வெட்ட ஆந்திர வனப்பகுதிக்கு வந்ததாக கூறி அவர்களை கைது செய்துள்ளனர். இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.
அந்திர வனப்பகுதியில் உள்ள செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதாகவும், அதன் காரணமாக தமிழர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு ஆந்திர சிறையில் உள்ள நிலையில், சமீபத்தில் 5 தமிழர்கள் குளத்தில் மூழ்கி தற்கொலை செய்துகொண்ட விவகாரமும் பூதாகாரமாக எழும்பியது.
அதைத்தொடர்ந்து, ஆந்திர மாநில வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றனர். இந்நிலை யில், நேற்று இரவு வழக்கம் போல் ரோந்து சென்றபோது செம்மரக்கட்டைகள் வெட்டிக் கடத்தியதாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேரை கைது செய்து விசாரித்ததாக கூறப்படுகிறது.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில், திருப்பதி-கடப்பா சாலையில் தார்ப்பாய் போட்டு சென்றுகொண்டிருந்த லாரி ஒன்றை பின்தொடர்ந்து சென்று, ஆஞ்சநேயாபுரம் வனத்துறை சோதனை சாவடியில் மடக்கி ஆய்வு செய்தனர்.
அப்போது லாரியினுள் 84 தமிழர்கள் மறைந்து இருந்தது தெரியவந்ததையடுத்து அனைவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களை செம்மரம் வெட்ட அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.