டில்லி:
நாட்டின மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி டெபாசிட்டுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தில் சிறு மாற்றத்தை செய்துள்ளது. இந்த மாற்றம் இன்றுமுதல் அமலுக்கு வருவதாகவும் கூறி உள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு, மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை போன்ற காரணங்களால் வங்கி வட்டிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த வட்டியை குறைத்து அனைத்து வங்கிகளும் அறிவித்தன. இந்நிலையில், எஸ்பிஐ வங்கி தற்போது வட்டி விகிதத்தை சற்று உயர்த்தி அறிவித்து உள்ளது.
அதன்படி, 7 – 45 நாட்கள் வரையிலான டிபாசிட்டுக்கு அளிக்கப்பட்ட, 5.25 சதவீதம் வட்டி, தற்போது, 5.75 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும், ஓராண்டு டிபாசிட்டுக்கான வட்டி விகிதம், 6.25 சதவீதத்தில் இருந்து, 6.40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
2 – 10 ஆண்டுகள் வரையிலான டிபாசிட்டுக்கான வட்டி விகிதம், 6.50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது, இதற்கு முன், 6 சதவீதமாக இருந்தது.மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம், 6.5 சதவீதத்தில் இருந்து, 7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இந்த வட்டி விகித உயர்வு, உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இவ்வங்கி, ஏற்கனவே, 1 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட டிபாசிட்டுகளுக்கான வட்டியை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மேலும் விவரம் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக்குங்கள்
https://www.sbi.co.in/portal/web/interest-rates/domestic-term-deposits