துபாய்
ஸ்ரீதேவியின் மரணத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப் படாததால் அவர் உடல் இந்தியா வர மேலும் தாமதம் ஆகும் என தெரிய வந்துள்ளது.
இந்தியாவின் புகழ்பெற்ற நடிகை ஸ்ரீதேவி தனது உறவினர் திருமணத்துக்காக துபாய் சென்றுள்ளார். கடந்த 24ஆம் தேதி இரவு அவர் தங்கி இருந்த ஜுமிராஹ் எமிரேட்ஸ் டவர்ஸ் ஓட்டலில் அவர் கழிவறையில் மயங்கிய நிலையில் இருந்ததாகவும் அதன் பின் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் துபாய் செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.
தற்போது வந்துள்ள தகவலின்படி பல புதிய செய்திகள் வெளிவந்துள்ளன.
அவை பின் வருமாறு :
ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அவருக்கு ஆச்சரியத்தை உண்டாக்க திடீரென துபாய்க்கு சென்றுள்ளார். மாலை 5.30 மணிக்கு அவர் துபாய் சென்றுள்ளார். இரவு கணவுடன் சுமார் 15 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்த ஸ்ரீதேவி கழிப்பறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் கணவர் கழிப்பறைக் கதவை தட்டி உள்ளார். அவர் கதவை கிட்டத்தட்ட உடைத்து உள்ளே சென்றபோது அவர் குளியல் தொட்டியில் தண்ணீரில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். அதன் பிறகு அவரை கணவரும் மற்றவர்களும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார் என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அவர் உடல் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது, மேலும் அவரது இரத்தமும் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று பகல் சுமார் 12.30 மணி வரை அந்த ஆய்வின் முடிவுகள் வராததால் ஸ்ரீதேவியின் உடல் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வர தாமதமாகும் என கூறப்படுகிறது.
அந்த முடிவுகள் துபாய் காவல்துறைக்கு அளிக்கப்பட்டபின் அவரது உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும். அதன் பிறகு அவரது பாஸ்போர்ட் இந்திய தூதரகத்தால் ரத்து செய்யப்பட்டு அரசு வழக்கறிஞர் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் உத்தரவை வழங்குவார். அதன் பிறகு ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் மும்பைக்கு எடுத்து வரப்படும்.