இலங்கையில் இருந்து நளினி ரத்னராஜ் மனித பெண் உரிமை செயற்பாட்டாளர்
இலங்கையில் மாசி மாதம் பத்தாம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடந்து முடிந்து விட்ட நிலையில் பலரும் பல விதமான கருத்துக்களையும் அவதானங்களையும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர். இம்முறை நடந்த தேர்தல் முறையானது இலங்கையில் முதல் முறையில் அறிமுகப்படுத்தபட்ட கலப்பு முறையாகும். இதில் பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு சட்டமாக கொண்டு வரப்பட்டது என்பதையும் ஞாபகப்படுத்தல் அவசியம்.
முன்னைநாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே 2015 தேர்தலுக்கு பின் தான் பொது ஜன மக்கள் கட்சி என்று ஒன்றை ஆரம்பித்தார். இது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து பிரிந்த கட்சியாகும். இந்த கட்சி நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிங்கள மக்கள் செறிந்து வாழும் இடங்களில் 222 சபைகளை தன்னகத்தே கொண்டுள்ளது.
இதே போல் மைத்ரியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எழு சபைகளையும், ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு உட்பட 41 சபைகளையும் வென்றுள்ளது. இது இவ்வாறு இருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு எந்தவொரு பிரதேச சபையிலும் தனியே ஆட்சி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் மற்றைய தமிழ் முஸ்லிம் கட்சிகளுடன் சேர்ந்தே ஆட்சி அமைக்கப்படவேண்டும் என்ற நிலை தோன்றி உள்ளது. இது தமிழரசு கட்சியின் பின்னடைவையே காட்டுகிறது.
இவ்வாறு மகிந்தவின் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் சில வேளை தேசிய மட்டத்தில் கட்சி தாவல்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு நடக்குமிடத்து அது மாகாண சபை தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது.
அப்படி நடக்குமாயின் மைத்ரி ரணில் கூட்டணி ஆட்டம் காணும். கூடவே இப்போது நடந்து கொண்டிருக்கும் நல்லிணக்க செயற்பாடுகள் நீதிக்கான நிலைமாற்ற செயல்பாடுகள் முற்று பெறலாம்.
மகிந்த வெற்றி பெற்றதுக்கான காரணங்கள் பலதும் பலவிதமாகவும் கணிக்கப்படுகின்றது. எது எவ்வாறாயினும் சில விடயங்களை உற்று நோக்க வேண்டும். ஊழலை ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வந்த மைத்ரி ரணில் கூட்டணி பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. மகிந்த அண்ட் கோ மீது சாட்டபட்ட ஊழல், சொத்துகுவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. விசாரணை மந்த கதியில் நடக்கிறது , எந்த குற்றமும் நிருபிக்கபடவில்லை.
அதே நேரம் நிதிமோசடியில் ரணில் மைத்ரி கூட்டணியும் மாட்டிகொண்டது . இது மக்களிடையே வெறுப்பையும் தட்போத அரசாங்கத்தில் நம்பிக்கை இல்ல நிலையையும் தோற்றுவித்துள்ளது என்பதும் உண்மையே. அதுமாத்திரம் இல்லை, இந்த அரசு மக்களின் வாழ்வாதார சமூக பொருளாதார அபிவிருத்தியில் அக்கறை செலுத்தவில்லை. பெரிதாக நல்ல மாற்றங்களை திட்டங்களை ஏற்படுத்தவில்லை. இது மக்களின் அன்றாட பிரச்சனைகளில் தாக்கம் செலுத்தியதில் மக்கள் விரக்தி நிலைக்கு தள்ளபட்டனர். இதனால் மக்களின் ஆதரவு குறையத்தொடங்கியது.
இதே நேரம் தமிழர் பிரச்சனை என்று வரும் போது இந்த கூட்டணி அரசு குறிபிடத்தக்க அளவு சிறிய முன்ற்றன்களை ஏற்படுத்தி உள்ளது. ஐ நாவில் தங்கள் ஒத்துழைப்போடு பொறுப்பு கூறல் நல்லிணக்கம் போன்றவற்றை நாங்கள் செய்வோம் என உறுதி பூண்டனர்.
இந்த மைத்ரி ரணில் அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பை பெற்றது அவர்களின் ஆதரவையும் பெற்றது அதன் பிரகாரம் காணாமல் ஆக்கபட்டோருக்கான சட்டமூலம் கொண்டு வரப்பட்டது , காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, வடகிழக்கில் மக்கள் ஓரளவேனும் சுதந்திரமாக நடமாடக்கூடியாதாக கூடங்களை நடத்த கூடியதாக உள்ளது. அரசுக்கெதிரான ஆர்பாட்டங்களை செய்யகூடியதாக உள்ளது. ராணுவத்தை விமர்சிப்பதை தவிர கருத்து சுதந்திரம் மகிந்த ஆட்சியை விட நல்ல நிலையில் உள்ளது. தகவலறியும் சட்டமூலம் கொண்டு வரப்பட்டது. அரசியல் யாப்பு திருத்தம் செய்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருகின்றது, ஐ நாவின் பிரமுகர்கள் நாட்டுக்கு வந்து போக இந்த அரசு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மகிந்தவின் கட்சியும் ஆதரவாளர்களும் பெரிய அளவில் ஒத்துழைப்பு வழங்கவும் இல்லை, அதே நேரம் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதையும் ஞாபகபடுத்தல் அவசியம். அது மட்டுமல்ல இவ்வகையான இந்த அரசின் முன்னெடுப்புக்கள் திரும்பவும் விடுதலை புலிகளை கட்டி அமைக்கும் செயலுக்கு உறுதுணையாய் இருப்பதாகவும் மீண்டும் பயங்கரவாதம் தோன்றும் என்ற நிலைபாட்டை சிங்கள மக்களிடையே உண்டாக்கியது, இது சிங்கள மக்கள் இந்த ரணில் மைத்ரி கூட்டாச்சியை வெறுக்கவும் சந்தேகப்படவும் எதுவாகவும் இருந்தது.
போரை வென்று கொடுத்தவர் நாட்டை காப்பாற்றியவர் மகிந்தவே என்பது மகிந்த கட்சிக்கு லாபம் தரும் பெரும் முதலீடாக தொடந்து இருப்பதை அவதானிக்கலாம். இந்த எண்ணப்பாடை தோற்கடிப்பதற்கு மைத்ரி ரணில் கூட்டணி ஆகப்போர்வமான எந்த செயல்திட்டங்களையும் செய்யவும் இல்லை , அவர்களும் அவர்களுடைய சிங்கள வாக்கு வங்கியையே தங்களுக்கும் முதலீடாக்கி கொண்டனர். இது தவிர புலம்பெயர் தேசத்தில் நடக்கும் சில நிகழ்வுகளும் பெரும்பான்மை இனத்தவரின் மத்தியில் வெறுப்பையும் பயத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதுவும் மகிந்தவுக்கு ஆதரவை பேருக்கும் காரணியாகும் என்பதை மறுக்கலாகாது.
இது இவ்வாறிருக்க தமிழ் தேசிய கூடமைப்பின் பின்னடைவு மக்கள் அவர்கள் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பு களை கேள்விக்குறியாக்கி உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சனையிலும் நீதிக்கான நிலைமற்ற செயல்பாடுகளிலும் இந்த அரசாங்கம் ஆமை வேகத்தில் நகர்கின்றது என்பதையும் குறிப்பிட வேண்டும். அனால் தமிழ் தேசிய கூடமைப்பு எதிர் கட்சியாக இருந்து கொண்டு தமிழர்களுக்கு இந்த அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும் அதை பற்றி தமிழ் தேசிய கூட்டமைப்பு பெரிய அளவில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்காததும் போரால் பாதிக்கபட்ட மக்களின் விரக்திக்கு காரணமாகும்.
குறைந்த பட்சம் அரசியல் கைதிகளின் விடுதளைகூட இவர்களால் செய்ய முடியவில்லை. அது மாத்திரமில்லை போரால் பாதிக்கபட்ட வடக்கு கிழக்கில் பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழரசுக்கட்சி வினைத்திறனான சமூசெயல்பாடுகளை செய்யவும் இல்லை. வறுமை நிலை கூடுகின்றது. மது போதைவஸ்து பழக்கம் அதிகரிகின்றது , பெண்களுக்கு, சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்ப்ரயூகங்களும் நடந்த வரே உள்ளது. மக்கள் அன்றாட வாழ்வுக்கே போராட வேண்டி உள்ளது. குறிப்பிட்ட குறைபாடுகளானது மற்றய தமிழ் தேசிய கூடமைப்பை எதிர்க்கும் தமிழ் கட்சிகளுக்கு தங்களுக்கு ஆதரவை பெற்று கொள்ள எதுவாக அமைந்து விட்டது.
மொத்தத்தில் முழு நாடும் அன்னியர் வசம் செல்கின்றது, திறந்த பொருளாதார கொள்கையால் எங்களுடைய வளங்கள் நிலம், மலை, மண், நீர் என்பன சூறயாடப்படுகின்றது, சீனா போர்ட் சிட்டி செயல்திட்டம் எங்களுடைய சமுத்திரத்தையும் அபகரித்து விட்டது. கார்பெட் பாதைகளும், 100வருட ஒப்பந்தத்துக்கு கொடுக்கபட்ட வானுயர்ந்த கட்டடங்களும் அதிவேக பாதையும் சாதாரண மக்களின் வாழ்வின் தரத்தை உயர்த்தவும் இல்லை. வானுயர்ந்த கட்டிடங்கள் போல் முவ்வின மக்களின் அன்றாட பிரச்சனைகளும் வறுமையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இவை எல்லாவற்றையும் கண்டுகொள்ளாத அளவுக்கு தமிழ் சிங்கள முஸ்லிம் தேசியவாதமும் இனவாதமும், மதவாதமும் எம் கண்களை மறைத்து எம்மை குருடராக்கி விட்டது. மொத்த இலங்கையருக்கும் நடக்கும் அநியாயத்தை மக்கள் உணரும் தருணமே இலங்கை தீபத்திற்கு விமோச்சனம்.