கேப்டவுன்:

தென் ஆப்ரிக்காவின் க்ருகேர் தேசிய பூங்கா அருகே வேட்டைக்காரர் ஒருவரை சிங்கங்கள் கூட்டமாக தாக்கி கடித்து கொன்று உடலை சாப்பிட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

தென் ஆப்ரிக்கா லிம்போபோ வடக்கு மாகாணத்தில் ஹோயட் ஸ்பிரிட் என்ற பகுதியில் கடந்த சில ஆண் டுகளாக வன விலங்குகளை வேட்டையாடும் சம்பவம் அதிகரித்துள்ளது. சிங்கத்தின் உடலில் பாகங்கள் பாரம்பரிய மருத்துவத்திற்கு தேவைப்படுவதால் சிங்கங்களை வேட்டையாடுவது அதிகளவில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஒரு பண்ணை அருகே விஷம் வைத்து அதிக எண்ணிக்கையில் சிங்கங்கள் கொல்லப்பட்டன. அவற்றின் தலை, கால்கள் மட்டும் துண்டிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் தென் ஆப்ரிக்காவில் க்ருகேர் தேசிய பூங்காவில் வேட்டையாட சென்ற ஒருவரை சிங்கங்கள் சூழ்ந்து கடித்து கொன்று, உடலை சாப்பிட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரது சிறிய அளவிலான உடல் பாகம் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சில பாகங்கள் கடந்த வார இறுதியில் ஒரு தனியார் விளையாட்டு பூங்கா புதரில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு பூங்கா பகுதியில் வேட்டையாட சென்ற நபரை சிங்கங்கள் தாக்கியிருக்கலாம். அவரது தலை, சில பாகங்கள் தவிர முழு உடலையும் சிங்கங்கள் சாப்பிட்டுவிட்டன என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதே பகுதியில் இருந்து தோட்டாக்கள் நிரப்பிய ஒரு வேட்டை துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தென் ஆப்ரிக்காவில் சிங்கங்களை போல் ஒற்றை கொம்புள்ள காண்டாமிருக வேட்டையும் அதிகளவில் நடக்கிறது. சீனா, வியட்நாம் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இதன் கொம்புக்கு அதிக தேவை இருப்பதால் வேட்டை அதிகளவில் நடக்கிறது.