வருமானவரித்துறை அதிகாரி என்று சொல்லிக்கொண்டு ஜெ.தீபா வீட்டுக்குள் நுழைந்த போலி நபர், தன்னை தீபாவின் கணவர் மாதவன்தான் அனுப்பி வைத்தார் என்று தெரிவித்துள்ளனர்
சென்னை தி.நகரில் உள்ள ஜெ.தீபா வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கடந்த பத்தாம் தேதி காலை தகவல் பரவியது. இதையடுத்து அங்கு காவல்துறையினர் வந்தனர். அதோடு ஊடகத்தினரும் வந்தனர்.
ஆனால், வருமானவரித்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டவர், காவல்துறையினரைப் பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், போலி நபர் நேற்றிரவு சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தன் பெயர் பிரபு என்றும், தன்னை படத்தில் நடிக்க வைப்பதாக ஏமாற்றி தீபாவின் கணவர் மாதவன்தான் தீபாவின் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரி போன்ற போலி ஐ.டி கார்டு, சோதனை வாரன்ட் என அனைத்தையும் தீபாவின் கணவர் மாதவனே போலியாக தயாரித்து கூரியரில் அனுப்பி வைத்தார் என்றும் கூறியுள்ளார்.
இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.