பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் பெல்லாரியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ‘‘ முன்பு ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தம் பெங்களூருவில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்துக்கு தான் அளிக்கப்பட்டது.
ஆனால் தற்போது இந்த ஒப்பந்தத்தை பிரான்ஸ் நாட்டில் கொடுத்துள்ளார் மோடி. பெங்களூரு தனித்து நிற்க ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனமும் ஒரு காரணமாக இருந்தது. ரபேல் ஒப்பந்தத்தை பிரான்சுக்கு கொடுத்ததன் மூலம் பெங்களூரு இளைஞர்களின் எதிர்காலத்தை பறித்துக் கொண்டார் மோடி. அந்த ஒப்பந்தத்தை தனிப்பட்ட முறையில் தனது நண்பரிடம் ஒப்படைத்து விட்டார்.
மோடியிடம் 3 கேள்விகள் கேட்கிறோம்.
1. என்ன காரணத்துக்காக இந்த ஒப்பந்தத்தை உங்கள் நண்பருக்கு கொடுத்தீர்கள்?.
2. உங்கள் ஒப்பந்தத்தால் போர் விமானத்தின் விலை கூடியதா?, குறைந்ததா?.
3. பாரீஸ் நகரில் இந்த திடீர் முடிவை எடுத்தபோது நமது ராணுவ அமைச்சர் கோவாவில் மீன் வாங்கி கொண்டிருந்தார். அப்போது இந்த முடிவுக்கு அமைச்சரவையில் ஒப்புதலை பெற்றீர்களா?.
இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள் மோடி. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, ரபேல் விமான ஊழல் குறித்து பேசவில்லை. கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய எடியூரப்பாவை மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி மோடி பிரச்சாரம் செய்கிறார்’’ என்றார்.