சென்னை

பிரதமர் மோடிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் பக்கோடா தயாரித்து போராட்டம் நடத்தினர்.

இந்தியாவில் புதிய வேலை வாய்ப்பு உருவாகாதது பற்றி கூறும் போது பிரதமர் மோடி பக்கோடா விற்பதும் ஒரு வேலை வாய்ப்பே என்னும் பொருளில் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.   இதற்கு நாடெங்கும் இதற்கு எதிர்ப்பு பெருகி வருகிறது.  கர்னாடகா, லக்னோ போன்ற பல இடங்களில் இளைஞர்கள் பட்டமளிப்பு உடை அணிந்து சாலையில் பக்கோடா விற்று போராட்டம் நடத்தினர்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை பக்கோடா என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.   இன்று சென்னை உயர்நீதிமன்ற வாயிலில்  காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர்கள் “பட்டதாரிகளின் பக்கோடா மேளா” என்னும் பெயரில் பக்கோடா தயாரித்து போராட்டம் நடத்தினர்.   வாயிலில் உள்ள ஆவின் விற்பனையகம் அருகே இந்த போராட்டம் நடைபெற்றது.  இதை ஒட்டி பலத்த போலீஸ் காவல் போடப் பட்டிருந்தது.

வழக்கறிஞர்கள் பட்டமளிப்பு உடை அணிந்து பக்கோடா தயாரிப்பதை மக்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்தனர்.   வழக்கறிஞர்கள் தாங்கள் தயாரித்த பக்கோடாவை கூடியிருந்த மக்களுக்கும் காவல்துறையினருக்கும் கொடுத்தனர்.   போலீசாரில் சிலர் மட்டும் சாப்பிட்டனர்.  பெரும்பாலானோர் வாங்கிக் கொள்ளவில்ல.    மேலும் போராட்டத்தில் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து உரையாற்றப்பட்டது.