விருதுநகர்:
தமிழக பாஜக நிர்வாகிகளில் ஒருவரான எஸ்.வி.சேகர் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து, உண்ணவிரதம் இருந்த ஜீயரை சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர், மடாதிபதிகள் உண்ணாவிரதம் இருப்பதன் காரணமாக தமிழகத்தில் உள்ள கோவில்களில் தீ பிடிக்கிறது என்று அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளார்.
கவிஞர் வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக இந்து அமைப்பபை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையடுத்து, வைரமுத்து வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார். ஆனால், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இ ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் கடந்த மாதம் 17ந்தேதி உண்ணாவிரதம் மேற்கொண்டார். பின்னர் அடுத்த நாளே வாபஸ் பெற்றார். இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்வதாக அறிவித்தார்.
ஆனால், அவரது உண்ணாவிரத போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவு இல்லாத நிலையில், இன்று பாஜக தேசிய செயலாளர் ராஜா, எஸ்.வி.சேகர் உள்பட பலர் உண்ணாவிரதத்தை கைவிடும்படி கோரியதாகவும், அதன் காரணமாக உண்ணாவிரதத்தை கைவிடுவதாக ஜீயர் அறிவித்தார்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர், ஜீயர் போன்ற மடாதிபதிகள் உண்ணவிரதம் இருப்பதால்தான், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் தீவிபத்து ஏற்பட்டு கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.