சென்னை,
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 20ந்தேதி அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் அதிரடியாக கட்டணத்தை அரசு உயர்த்தியது. இது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்த ஒருநாள், வாராந்திர, மாதாந்திர பஸ் பாஸ் கட்டணமும் உயர்வதாக என தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், ஒருநாள் பஸ் பாஸ் மற்றும் வாராந்திர பஸ் பாஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார்.
தற்போது, மாநகர அரசு பேருந்துகளில் ஒரு நாள் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணம் 50 ரூபாயாக உள்ளது. இது 80 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும், அதுபோல மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் 1000 ரூபாயில் இருந்து 1300 ரூபாயாக அதிகரிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. இது பொதுமக்களிடையே மீண்டும் அதிருச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த தகவல்கள் தவறானது என்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் பாஸ் மற்றும் வாராந்திர பஸ் பாஸ் கட்டணங்களில் எந்தவித மாற்றமுமில்லை. இதில் உள்ள குளறுபடிகளை நீக்க அரசு ஆய்வு செய்து வருகிறது என்றார்.
மேலும், தற்போது மாதாந்தர சீஸன் டிக்கெட் மட்டுமே ரூ.240-லிருந்து ரூ.350 ஆக உயர்த்தப்படுகிறது. மற்ற எந்த பஸ் பாஸ் கட்டணமும் மாறவில்லை என்றும், தமிழகத்தில் போக்குவரத்து துறையை நவீனமயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, சுற்றுச்சுழல் மாசு படாதவகையில், முதலில் 200 பேட்டரி மூலம் இயங்கும் பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
தற்போது பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், இதன் காரணமாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடி ரூபாய் இழப்பை தமிழக போக்குவரத்துக் கழகம் சந்தித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.