மாலே:

மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது என்று அந்நாட்டு அட்டார்னி ஜெனரல் முகமது அனில் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்கட்சி தலைவர்கள் 9 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று மாலத்தீவு உச்சநீதிமன்றம் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால், அவர்களை அரசு விடுதலை செய்யவில்லை. இதனால் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிபரை பதவி நீக்கம் செய்ய உ ச்சநீதிமன்றம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது என்று அட்டார்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

‘‘இந்த தகவலை அரசு துறைகளும் உறுதி செய்துள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி எந்த அரசு துறையும் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளும் உரிமை கிடையாது. இத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் சட்டத்தை அமல்படுத்தும் துறைகள் அரசியலமைப்புக்கு எதிராக எத்தகைய செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது. இது நடந்தால் தேசிய அளவில் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.