தராபாத்

பாஜகவுக்கு எதிராக செயல்படும்  யஷ்வந்த் சின்ஹாவும் சத்ருகன் சின்ஹாவும் கட்சியில் இருந்து அவர்களாகவே விலக வேண்டும் என தெலுங்கானா பாகஜ தலைவர் கூறி உள்ளார்.

பாஜக முன்னாள் அமைச்சரான யஷ்வந்த் சின்ஹாவும்  முன்னாள் நடிகரும் பாஜக பாராளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹாவும் கட்சியைப் பற்றியும், மோடியைப் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.   இருவரின் கருத்துக்களும் மற்ற பாஜக தலைவர்களிடையே கடும் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.

தற்போது யஷ்வந்த் சின்ஹா, “ராஷ்டிர மன்ச்” என்னும் அரசியல் அமைப்பை உருவாக்கி உள்ளார்.   இதில் சத்ருகன் சின்ஹா தலைமயில் பல அரசியல் தலைவர்கள் இணைந்துள்ளனர்.     இந்த அமைப்பு மத்திய அரசு எடுக்கும் மக்கள் விரோத முடிவுக்கு எதிராக போராடும் என யஷ்வந்த் சின்ஹா அறிவித்துள்ளார்.   சத்ருகன் தனக்கு தன் கருத்துக்களை சொல்ல கட்சி வாய்ப்பளிக்காததால் இந்த அமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது பாஜக தலைவர்களிடையே உள்ள அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது.

இதையொட்டி தெலுங்கானா மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.  அவர், “ஒரு தேசிய கட்சியான பாஜகவை விமர்சிப்பதற்கும் ஒரு வரம்பு உள்ளது.   ஆனால் யஷ்வந்த் சின்ஹா மற்றும் சத்ருகன் சின்ஹா ஆகியோர் அந்த வரம்பை மீறுகின்றனர்.    மூத்த தலைவர்கள் என்பதால் கட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர்த்து  வருகிறது.   அவர்கள் கட்சியை எதிர்க்க விரும்பினால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்த பின் அதை செய்யலாம்.

பாஜக போட்டியிட வாய்ப்பளித்ததால் தான் சத்ருகன் பாராளுமன்ற உறுப்பினர் ஆகி உள்ளார்.    அவர் கட்சியை எதிர்ப்பதானால் அந்த பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.   அவர்கள் இருவருக்கும் கட்சியில் எந்தப் பதவியும் அளிக்கப்படவில்லை.   எந்த ஒரு தேர்தல் பணியிலும் கலந்துக் கொள்ளாமல் கட்சிக்கு துரோகம் செய்துள்ளனர்.

பாஜக அவர்களை கட்சியில் இருந்து விலக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து விடவில்லை.    கட்சியின் ஜனநாயகத்தை காக்க அவர்களாகவே கட்சித் தலைமையிடம் மன்னிப்பு கோரி,  கட்சியை விட்டு விலக வேண்டும்.    கடந்த மூன்று வருடங்களாக கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் எந்த ஒரு பயனும் அவர்களுக்கு கிட்டவில்லை.   கட்சியை விட்டு விலகிய பின் இந்த பாஜக எதிர்ப்பை நடத்தலாம்”  என கூறி உள்ளார்.