சென்னை:
தமிழக அரசு பேருந்து கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளுக்கு 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயும், மாநகர, நகர பேருந்துகளில் குறைந்த பட்சம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்து, சொகுசு பேருந்து கட்டணமும் உயர்ந்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகர பேருந்துகளில் குறைந்தபட்சமாக 3 ரூபாயாக உள்ள கட்டணம் 5 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. வெள்ளை போர்டு, பச்சைப் போர்டு மற்றும் டீலக்ஸ் வகை பஸ்களின் கட்டணம் அந்தந்த தூரத்துக்கு ஏற்ப உயர்கிறது. அதிகப்பட்ச கட்டண உயர்வு 25 ரூபாயாக உள்ளது.
வங்கிகளில் வாங்கிய கடன் ரூ.2,400 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் வங்கிக் கடனுக்காக பணிமனைகளை அடகு வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியம் உள்ளிட்டவை தொகை மட்டும் ரூ.1,500 கோடி நிலுவை உள்ளது. இதன் காரணமாக அரசு பஸ்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு முன்பு ஊதிய உயர்வு கோரி அரசு பஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப்பப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பஸ் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பு 2011ம் ஆண்டு தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. 7 ஆண்டுகளுக்குப்பின்னர் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.