பனாஜி,

கோவாவில் டாங்கர் லாரியில் எடுத்துச்செல்லப்பட்ட அம்மோனியா  விசவாயு கசிவு ஏற்பட்டதால் அருகிலுள்ள கிராமத்தினர்  2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  இதன் காரணமாக அருகிலுள்ள கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்றி வருகின்றனர்.

கோவாவின் வாஸ்கோ நகர் பகுதியில் இன்று அதிகாலை அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு டாங்கர் லாரியில் இருந்து அமோனியா விஷவாயு கசியத் தொடங்கியது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

அமோனியா வாயு காரணமாக இரண்டு பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை அருகிலுள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறையினர் கூறி உள்ளனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள  கிராமமக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருவதாகவும், டாங்கர் லாரியில் இருந்து அமோனியா வாயு கசிவை தடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தெரிவித்துள்ளனர்.