பாளையங்கோட்டை,

ண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து தெரிவித்த கருத்து தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் மன்னிப்பு கேட்கக்கோரி இந்து அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நெல்லையில், பேசிய பாஜக துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன்,  வைரமுத்து நாக்கை அறுத்தால் ரூ.10 கோடி தருவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

கடந்த சிலநாட்களாக  தமிழகத்தில் ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறிய கருத்து குறித்து சர்ச்சை எழுந்து, அதன் காரணமாக இந்து அமைப்பினரால் போராட்டங்களும் நடைபெறு வருகின்றன. அதைத்தொடர்ந்து, வைரமுத்து, தான் கூறிய கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாக அறிவித்தார்.  அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நெல்லையில் நடைபெற்ற இந்து அமைப்பினர் போராட்டத்தில் கலந்துகொண்ட, முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது பாரதியஜனதாவின் துணைத்தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசும்போது,

இந்து மதத்தை யார் தவறாக பேசினாலும் அவர்களை கொலை செய்ய தயங்க கூடாது என்று தெரிவித்தார். கவிஞர் வைரமுத்து நாக்கை அறுத்தால் 10 கோடி ரூபாயை தர தொண்டர்கள் தயாராக உள்ளதாகவும் நயினார் நாகேந்திரன் கூறினார்.

அவரது பேச்சு மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில், அவர்மீது வழக்கு பதிவு செய்ய பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நயினார் நாகேந்திரன் மீது வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக  6 பிரிவுகளில் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிய அய்யா வைகுண்டர் வழிபாடு சிவசந்திரன், பாஜக மாவட்ட செயலாளர் சுரேஷ், பாலகன், கிருஷ்ண பிரியா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர் நயினார் நாகேந்திரன். ஜெ.மறைவை தொடர்ந்து சில காலம் ஒதுங்கியிருந்த அவர், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 26ந்தேதி  டில்லியில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார். அதன் காரணமாக அவருக்கு தமிழக பாரதியஜனதா துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.