ஜெய்ப்பூர்:

‘பத்மாவத்’ திரைப்படம் வெளியானால் ஒட்டுமொத்தமாக பெரிய அளவில் பெண்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என்று ராஜ்புட் கார்னி சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும் இந்த திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி அந்த அமைப்பு சார்பில் ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் கண்டன பேரணி நடந்தது. அமைப்பின் புரவலர் லோகேந்திரா சிங் கால்வி தலைமையில் நடந்த இந்த பேரணியில் ஆயிரகணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர். தங்களது கோரிக்கையை மத்திய அரசிடம் தெரிவிக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

முன்னதாக பேரணி உ.பி. மாநில எல்லையான தோல்பூரில் இருந்து தொடங்கியது. அங்கு மூத்த தலைவர்கள் பேசுகையில், ‘‘உ.பி.யில் பத்மாவத் திரைப்படத்தை முதல்வர் யோகி தடை செய்ய வேண்டும். ஹரியானா மாநில அரசை நாங்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியை தொடர்ந்து இதற்கு தடை விதித்துள்ளது. இதில் பிரதமர் தலையிட வேண்டும். நாடு முழுவதும் பத்மாவத் திரைப்படம் வெளியாக தடை விதிக்க வேண்டும்.

இந்த படம் வெளியானால் நாட்டில் தேவையில்லாத பிரச்னைகள் எதிர்கொள்ள நேரிடும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. எங்களது உணர்வை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு ஏன் மவுனமாக உள்ளது என்று தெரியவில்லை. படம் வெளியாவதை தடுக்கவில்லை என்றால் பெண்கள் ஒட்மொத்தமாக தற்கொலை செய்து கொள்வோம். ஆண்கள் திரையரங்கத்திற்கு சென்று படத்தை நிறுத்துவார்கள்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘வரும் 25ம் தேதி திட்டமிட்டப்படி இந்த படம் வெளியானால் குடியரசு தினம் கருப்பு நாளாக மாறிவிடும். நாடு போர்க்களம் போல் மாறிவிடும். ஜனவரி 22ம் தேதி டில்லி ஜந்தர் மந்தரில் பெரிய அளவில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ராஜ்புட் சமூக மக்கள் இதில் கலந்துகொள்வார்கள்’’ என்றார்.