நெல்லை,

மிழர் திருநாளான பொங்கல் தினத்தை ஒட்டி தமிழகத்தின்  அனைத்து பகுதிகளிலும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

கபடி போட்டி முதல் ஜல்லிக்கட்டு, இளவட்டக்கல் தூக்குதல் போன்ற பல்வேறு பாரம்பரியமான விளையாட்டுக்களை விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த காலங்களில் ஆண்கள் மட்டுமே பங்குபெற்று வந்த இளவட்டக்கல் போட்டியில் தற்போது பெண்களும் களமிறிங்கி, நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று வீரமுழக்கமிட்டு உள்ளனர்.

தமிழக கிராமங்களில் ஆங்காங்கே இளவட்டக்கல் எனப்படும்  குறிப்பிட்ட கல் மைதானங்களில் காணப்படுவதை பார்த்திருப்போம். இந்த கல்லை தலைக்குமேல் தூக்கிக் காட்டும் இளைஞனுக்குத் தம் பெண்ணை மணம் முடித்து தருவதாக அறிவிக்கப்படுவதும், அந்த பெண்ணை மணம் முடிக்க அந்த பகுதி இளைஞர்கள் இந்த  இளவட்ட கல்லை தூக்கி தங்களது வீரத்தை நிரூபிப்பார்கள்.

இந்த இளவட்டக்கல் போட்டியில் தற்போது பெண்களும் களம்புகுந்து உள்ளனர். முறத்தால் புலியை விரட்டிய வீரப்பெண்கள் மிகுந்த தமிழ்நாட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் களத்தில் இறங்கி நெல் குற்றும் உரலைத் தூக்கி  தங்களின் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அந்த பகுதி இளைஞர்கள் கலந்துகொண்டு தங்களது வீரத்தை அரங்கேற்றினர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளை கிராமத்திலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அங்கு நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் இளைஞர்கள் கல்லை தூக்கி தங்களது வீரத்தை வெளிப்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து, பெண்களுக்கு நெல் குத்தும் உரலை தூக்கும் வகையில் போட்டி நடத்தப்பட்டது. இதற்காக சுமார் 45 கிலோ எடை உள்ள உரல் வைக்கப்பட்டது. இந்த உரரை ஒருசில பெண்கள் அசால்டாக தலைக்கு மேல் தூக்கி பின்புறம் வீசினர்.

இது பார்ப்போர்களை மெய்சிலிக்க வைத்தது.