சென்னை,
ஜெயலலிதா குறித்து சசிகலாவின் கணவர் நடராஜன் பல்வேறு கருத்துக்களை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அப்போது, தான் எழுதி கொடுத்ததை மட்டுமே அவர் செய்தார் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள அதிமுக மூத்த தலைவரும், துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.நடராஜன் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சசிகலாவின் கணவரும், புதிய பார்வை இதழின்ஆசிரியருமான ம.நடராஜன், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது,
ஜெயலலிதா வாசித்த அறிக்கைகள் எல்லாமே நான் எழுதி கொடுத்தவை தான். நான் போட்டு கொடுத்த இலவச திட்டங்கள்தான் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன. ஜெயலலிதாவிடம் வாழ்நாள் முழுவதும் இருந்த நல்ல விஷயம் நான் எழுதிக் கொடுத்த அனைத்து விஷயங்களையும் ஒரு கமா, புல்ஸ்டாப் இல்லாமல் அப்படியே பின்பற்றி வெற்றியை கண்டார்….. என்று கூறியிருந்தார்.
அவரது பேட்டி அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை சசிகலாவின் கணவர் நடராஜனை அவரது வீட்டுக்குள் கூட அனுமதி அளித்தது கிடையது. மேலும் அரசு நிர்வாகத்தில் தலையிடவும் தடை விதித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் நடராஜனின் பேட்டி அதிமுக தொண்டர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது,
கழகத்தின் மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் புகழை சிதைக்கும் வகையில் நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இதை நடராஜன் நிறுத்த வேண்டும் என தொண்டர்கள் சார்பில் எச்சரிக்கை விடுக்கிறோம். ஜெயலலிதா ஆட்சியில் செய்த சாதனைகளை கொச்சை படுத்தும் விதமாக நடராஜன் கருத்துகள் உள்ளன என்றார்.
மேலும், ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ள திட்டங்களை தான் தயார் செய்து கொடுத்ததுபோல் நடராஜன் பேசியுள்ளார். இது தொடர்ந்தால் எதிர்வினைகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கின்றேன்.
நடராஜன் ஒரு ‘கிரிமினல்’ என எம்.ஜி.ஆரால் வெளியேற்றப்பட்டவர் என்றும், அவர் அதிமுகவின் கொடியுடன் எங்கும் செல்ல முடியாது, தடுத்து நிறுத்தி விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.