டில்லி,
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தற்போதைய பிரதமர் மோடி நாடு முழுவதும் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தபோது ஒவ்வொரு இந்தியனின் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்று கூறினார்.
அவரது பேச்சு குறித்து, மதுரை சேர்ந்த மாணவர் ஒருவர் பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள பிரதமர் அலுவலகம், பதில் அளிக்க மறுப்பு தெரிவித்து உள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது, தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரதமர் மோடி, இனி இந்த நாட்டில் பசி, பட்டினி, பஞ்சம் இருக்காது. கறுப்புப் பணம் இருக்காது. ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. வேலையில்லாத இளைஞர்களைப் பார்க்க முடியாது. வளர்ச்சி… வளர்ச்சி… வளர்ச்சி என்ற ஒரே தாரக மந்திரத்துடன் பயணித்து ஒளிமிகுந்த பாரத தேசத்தைப் படைப்போம்” என்றார்.
மேலும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் சுமார் 75 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணத்தை மீட்டுவந்து, ஒவ்வொரு குடும்பத்தின் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் சேர்ப்பேன்’ என்று வாக்குறுதி அளித்தார்.
ஆனால், அவர் பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அவரது வாக்கு நிறைவேற்றப்பட வில்லை.
இந்நிலையில், மதுரையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர் சோமநாதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு மனு அனுப்பினார்.
அதில், நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி, ஒவ்வொரு இந்திய குடிமகன்கள் வங்கி கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி அந்த பணம் எப்போது எங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும்? அந்த தேதியை அறிவிக்கவும் என்று கேட்டிருந்தார்.
இந்த மனுவுக்கு டில்லியில் உள்ள பிரதமர் அலுவலகம் பதில் அனுப்பி உள்ளது.
அதில், உங்களது இந்த கேள்வி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வரவில்லை என்றும், அதன் காரணமாக பதில் அளிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டு பிரதமர் அலுவலக செயலாளர் பிரவீன்குமார் பதில் அனுப்பியுள்ளார்.