பா.ஜ.க-வும்  நடிகர் ரஜினியும் இணைந்து செயல்பட்டால்  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற முடியும் என ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதை அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.


துக்ளக் வார இதழின் 48-வது ஆண்டு விழா நேற்று நடந்தது. அதில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி,  “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பணப்பட்டுவாடா செய்தது வெளிப்படையாகவே தெரிந்த ஒன்று. அவரது வெற்றிக்கு தி.மு.க-தான் காரணம். தி.மு.க விலைபோய்விட்டது. மக்கள் – குறிப்பாக  இளைஞர்களை ஈர்க்கும் சக்தி தி.மு.க-வுக்கு கிடையாது. ஆகவே அக்கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை.

தமிழகத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. ஆகியவை வளர வேண்டும் என்றால், திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது.

ரஜினி, ஆன்மிக அரசியலை முன்னெடுக்கபோவதாக தெரிவித்துள்ளார்.  திராவிடக் கட்சிகளைப்போல தன்னுடைய ஆட்சி இருக்காது என்பதை அவரின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது. தமிழக அரசியலில் ரஜினிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. பா.ஜ.க-வும் ரஜினியும் இணைந்தால், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றலாம்” என்று பேசினார்.

குருமூர்த்தியின் பேச்சுகுறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டனர்.

“குருமூர்த்தியுடன் கருத்து மாறுபாடு இருந்தாலும், தி.மு.க. குறித்து அவர் கூறியது சரிதான்” என்று தெரிவித்த ஜெயக்குமார், “ மற்றபடி குருமூர்த்தி சொன்னதெல்லாம் நடக்க அவர் என்ன  என்ன தேவதூதரா?’ என்று கடுமையாக பதில் அளித்தார்.