மகாபலிபுரம்,
இன்று உலகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, அவரது 133 அதிகாரங்களை பெருமைப்படுத்தும் வகையில் 133 அடி திருவள்ளுவர் முழு உருவ மணல் சிற்பம் மகாபலிபுரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ளது.
அரசு சிற்பக்கல்லூரி மாணவர்கள் இந்த சாதனையை படைத்து அசத்தியுள்ளனர்.
பொங்கல் திருநாளை அடுத்த ஜனவரி 15ந்தி உலகம் முழுவதும் திருவள்ளுவர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தையொட்டி அவரது முழு உருவ மணல் சிற்பத்தை உருவாக்க அரசு சிற்பக் கல்லூரி மாணவர்கள் முடிவு செய்துரு, அதற்காக 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து சிற்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதற்கான இடம் மகாபலிபுரம் கடற்கரையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடந்த 4 நாட்களாக திருவள்ளுவரின் முழு உருவ மணல் சிற்பத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். திருக்குறளின் 133 அதிகாரங்களையும் நினைவுப்படுத்தும் வகையில் 133 அடியில் முழு உருவ சிலையை உருவாக்க முடிவு செய்தனர்.
இதற்கான பணியில் 4 ஜே.சி.பி. எந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டு மணல் குவிக்கப்பட்டு, 10 அடி உயரமுள்ள பீடத்தின்மீது சிலை இருப்பது போன்று 133 அடி உயரத்திலான சிலை அமைக்கப்பட்டது.
இப்படி முழு உருவ சிலை அமைக்கப்பட்டது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்ற சாதனையை படைத்துள்ளது.
இதுகுறித்து கூறிய மல்லை தமிழ் சங்க தலைவர் மல்லை சத்யாய கூறும்போது, திருவள்ளுவரின் 2049-வது பிறந்த நாளை யொட்டி உலக பொதுமறையான திருக்குறளை உலக மக்கள் உணரவும், திருவள்ளுவரை அறிந்து கொள்ள செய்யவும் இந்த முயற்சியை மேற்கொண்டதாக கூறினார்.
மேலும், கல்லெல்லாம் சிலை வடித்து தமிழனின் பெருமையை நிலைநாட்டிய பல்லவ ராஜாக்களின் மாமல்லபுரம் கடற்மணலில் தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இதை செய்துள்ளோம் என்றார்.
இந்த சிலையை உருவாக்க தேவையான உதவிகளை மகாபலிபுரம் தமிழ் சங்கத்தினர் செய்து கொடுத்துள்ளனர்.
தற்போது பொங்கல் விடுமுறை தினமாகையால், மகாபலிபுரம் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் திருவள்ளுவரின் 133 அடி மணல் சிற்பத்தையும் கண்டுகழித்து, அதை உருவாக்கிய மாணவர்களை பாராட்டி வருகின்றனர்.