மதுரை
அவனியாபுரத்தில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் பரிசு பெற்ற மணிகண்ட பிரபு தனது இந்த வருட பரிசுகளை ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
நேற்று அவனியாபுரம் ஜல்லிக்காட்டு போட்டி நடந்தது. இதில் மொத்தம் 643 காளைகள் வாடி வாசலில் இருந்து திறந்து விடப்பட்டன. மாலை 4 மணி வரை நடந்த இந்தப் போட்டியில் இளைஞர்கள் திரளாக கலந்துக் கொண்டனர். அவர்களுக்கு தங்க மோதிரம், சைக்கிள் போன்ற பல பரிசுகள் வழங்கப்பட்டன.
போட்டியின் முடிவில் அதிகமாடுகளை அடக்கியவர் என்ற முறையில் மணிகண்ட பிரபு என்பவருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப் பட்டன. அது தவிர அவருக்கு போட்டியில் முதல் பரிசும் வழங்கப் பட்டுள்ளது. கோடீஸ்வரவன், சூரியா ஆகிய இருவருக்கும் இரண்டாம் பரிசும், பரத்குமாருக்கு மூன்றாம் பரிசும் வழங்கப்பட்டன.
மணிகண்ட பிரபு இந்த வருடம் தான் பெற்ற பரிசுகள் அனைத்தையும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளார். அனைத்துப் பரிசு பொருட்களையும் மாவட்ட ஆட்சியாளர் மூலமாக வழங்கப் போவதாகவும் கூறி உள்ளார்.