கொல்கத்தா,
முத்தலாக்-குக்கு எதிராக வழக்கு தொடர்ந்து பிரபலமான இஷ்ரத் ஜஹான் பாரதியஜனதா கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
திருமணம் ஆன இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆண் ஒருவர் தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு பின்பற்றும் முத்தலாக் நடை முறைக்கு (3 முறை தலாக் கூறுவது) எதிராக சுப்ரீம் கோர்ட்டில் 5 முஸ்லிம் பெண்களும், பெண்கள் அமைப்புகளும் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, முத்தலாக் சட்ட விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு எதிரானது, இது செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பளித்தது.
அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் முத்தலாக்குக்கு தடை விதித்து புதிய மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், முத்தலாக்குக்கு எதிராக வழக்கு தொடுத்த இஷ்ரத் ஜஹான் மேற்கு வங்காள மாநில தலைநகர் கொல்கொத்தாவில் பா.ஜ.க.வில் இணைந்தார்.
மேற்கு வங்காளத்தின் கோலாபாரி பகுதியில் வசித்து வருபவர் இஷ்ரத் ஜஹான் என்ற பெண்மணி. இவரது கணவர் துபாயில் வசித்து வருகிறார். இவர் தனது மனைவிக்கு போன் மூலம் முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டார்.
இதையடுத்து, இஷ்ரத் ஜஹான் முத்தலாக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கனவே 4 பேர் முத்தலாக் தொடர்பாக வழக்கு தொடுத்திருந்தனர். இவர்கள் அனைவரது வழக்குகளையும் 5 பேர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.
சுப்ரீம் கோர்ட்டில் முத்தலாக் எதிர்த்து வழக்கு தொடர்ந்த இஷ்ரத் ஜஹானை அவரது குடும்பம் ’அழுக்கு பெண்’என புறக்கணித்தது
இந்நிலையில், முத்தலாக் விசாரணை முடிந்து கடந்த ஆகஸ்ட் மாதம் சுப்ரீம் கோர்ட் அமர்வு தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், முத்தலாக் வழக்கு தொடுத்தவர்களில் ஒருவரான இஷ்ரத் ஜஹான், மேற்கு வங்காள மாநிலத்தின் ஹவுரா நகரில் பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார்.
இதுதொடர்பாக, மாநில பா.ஜ.க. பொது செயலாளர் சயந்தன் பாசு கூறுகையில், இஷ்ரத் ஜஹான் ஹவுரா நகரில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் இணைந்துள்ளார் என தெரிவித்துள்ளார்.