யமுனா நகர், அரியானா
பெண்களை மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்து அதைத் தன் மகள் மூலம் வீடியோ எடுத்து மிரட்டிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியானா மாநிலத்தில் உள்ளது யமுனா நகர். இங்கு அசோக் குமார் என்பவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். இவருடன் ஒரு பெண் நட்பாக பழகி வந்துள்ளார். அந்தப் பெண்ணின் வீட்டுக்கு யாரும் இல்லாத நேரத்தில் மகளுடன் சென்ற அசோக் குமார் தனது மகளுக்கு நிச்சய தார்த்தம் நடந்துள்ளதாகக் கூறி இனிப்பு கொடுத்துள்ளார்.
அவர் கொடுத்த இனிப்பில் மயக்க மருந்து கலந்து இருந்ததால் அந்தப் பெண் மயங்கி விழுந்துள்ளார். அதன் பின் அவரை அசோக் குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அசோக் குமாரின் மகள் வீடியோ படமாக எடுத்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்தவரிடம் தந்தையும் மகளும் வீடியோவைக் காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதையொட்டி அசோக்குமாரையும் அவரது மகளையும் போலீசார் கைது செய்தனர். அப்போது மேலும் இரு பெண்கள் தங்களிடமும் இதே போன்று பணம் பறித்ததாக அசோக்குமார் மீதும் அவர் மகள் மீதும் போலீசாரிடம் புகார் அளித்தனர். தற்போது அசோக் குமாரிடமும் அவருடைய மகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.