சேலம்,

மிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று சேலத்தில் ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது சேலம் மாநகரை சுத்தமா வைக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் தமிழக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கு காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஏற்கனவே, கோவை, நெல்லை, குமரி மாவட்டத்தில் ஆய்வு நடத்திய ஆளுநர், கடலூரில் ஆய்வு செய்தபோது எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தன.

இந்நிலையில் இன்று சேலத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். சேலம் புதிய பஸ் நிலையத்தில்  ஆய்வு மேற்கொண்டார். அப்போது,  பஸ் நிலையத்தை சுற்றி பார்த்தார். பயணிகளிடம் கை குலுக்கினார்.

அப்போது பயணிகளிடம்  பஸ் நிலையத்தையும், சேலம் மாநகரையும் தூய்மையாக வைத்துக் கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் சேலம் மாநகரை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.

பின்னர் பஸ் நிலையத்தில் உள்ள மாதிரி கழிப்பறையை பார்வையிட்டார். அதன் பிறகு குப்பை அள்ள பயன்படுத்தப்படும் நவீன எந்திரம் பொருத்தப்பட்ட வாகனத்தையும், குப்பை அள்ள பயன்படுத்தப்படும் பொருட்களையும் பார்வையிட்டார்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் புதிய சாப்ட்வேர் ஒன்றையும் கவர்னர் வெளியிட்டார். கவர்னர் வருகையை யொட்டி புதிய பஸ் நிலையம் இன்று பளிச்சென்று காணப்பட்டது. போலீசாரும் பாதுகாப்புக்காக அதிக அளவில் குவிக்கப்பட்டு இருந்தனர்.