டில்லி,
அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியிடம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர் விஜேந்தர் சிங், திருமணம் எப்போது செய்துகொள்ள போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த ராகுல்காந்தி, நான் தலைவிதியை அதிகமாக நம்புகிறவன்… எனவே எப்போது நடக்குமோ அப்போது நடக்கட்டும் என்று பதில் கூறினார்.
டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராகுல்காந்தி கலந்துகொண்டார். அதே நிகழ்ச்சியில் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்ற விஜேந்தர் சிங்கும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது பொதுமக்களின் சரமாரியான கேள்விக்கு ராகுல்காந்தி ருசிகரமாக பதில் அளித்தார். அப்போது விஜேந்தர் சிங்கும் ராகுலிடம் சில கேள்விகளை எழுப்பினார்.
உங்கள் திருமணத்துக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். ஒருவேளை, பிரதமரான பிறகுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா? என்று கேட்டார்.
அதற்கு சிரித்துக்கொண்டே பதில் அளித்த ராகுல், , அது எப்போது நடக்குமோ அப்போது நடக்கும். நான் தலைவிதியை அதிகம் நம்புகிறவன் என்றார்.
மேலும், விளையாட்டுத் தொடர்பாக விஜேந்தர் சிங்கின் மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ராகுல்,
நான் தினமும் உடற்பயிற்சி செய்கிறேன். நீச்சலில் ஈடுபடுவேன். கராத்தேவில் கருப்பு பெல்ட் வாங்கியுள்ளேன். ஆனால் இதுபற்றி எல்லாம் பொதுமக்களிடம் என்னைப் பற்றி விளம்பரப்படுத்திக் கொண்டதில்லை. தினமும் ஒரு மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுவேன்.
ஆனால், கடந்த ஒரு சில மாதங்களாக அரசியலில் அதிக ஈடுபாடு கொண்டுள்ளதன் காரணமாக இவற்றை நான் செய்யவில்லை என்றார்.
தற்போது 47 வயதாகும் ராகுல் காந்தி இதுவரை திருமணம் செய்யாமல் காலம் கடத்தி வருகிறார். இதுகுறித்து அவரது தாயார் உள்பட பலர் பலமுறை கேள்வி எழுப்பியும் பதிலளிக்காமல் நழுவிச் சென்றுவிடுவார்.
ஆனால் இந்தமுறை பொதுமக்கள் முன்னிலையில் விஜேந்தர் கேள்வி எழுப்பியதால் எல்லாம் அவன் செயல் என்று கடவுளை கைகாட்டி உள்ளார்.