வேலூர்,

வேலூர் மாவட்ட துணைஆணையர், டெங்குவை ஒழிக்கும் வகையில் தியேட்டருக்கு சென்று நிலவேம்பு கசாயம் வழங்கினார்.

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது.  ஆங்காங்கே முகாம் அமைத்து நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வேலூர் மாவட்ட துணைகலெக்டர் டெங்கு கொசுவை ஒழிக்கும் பணிகளில் ஈடுபட்டு ஆய்வு செய்து வருகிறார். நேற்று வாணியம்பாடி பகுதியில் டெங்கு ஆய்வு பணி நடைபெற்றது.

அப்போது வீடு வீடாக சென்று டெங்கு கொசு ஒழிப்பு குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வந்தனர்.

அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் நடிகர் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் ஓடிக்கொண்டிருந்தது. அதையறிந்த துணை கலெக்டர் ஜெயபிரகாஷ் அந்த தியேட்டருக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது தியேட்டரில் கொசு உற்பத்தியாவது தெரியவந்ததால், தியேட்டர் நிறுவனத்துக்கு ரூ.5000 அபராதம் விதித்தார்.

தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்த மெர்சல் படத்தை இடையில் நிறுத்தச்சொல்லி, தியேட்டருக்குள் சென்று, மேடையில் தோன்றி டெங்கு குறித்து படம் பார்ப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிலவேம்பு குறித்து பேசினார்.

தொடர்ந்து படம் பார்க்க வந்திருந்தவர்களுக்கு நிலவேம்பு கசாயம் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது அவருடன் மேலும் பல அதிகாரிகள் உடன் சென்றிருந்தனர்.

துணை கலெக்டரின் இந்த அதிரடியாக நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.