கமதாபாத்

மோடியை 1947ல் காங்கிரஸ் பிரதமராக்க விரும்பியதாக பா ஜ க அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசி உள்ளார்.

அமைச்சர்கள் உளறுவதாகவும், அர்த்தமின்றி பேசுவதாகவும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மக்களால் விமர்சிக்கப்படுவது தெரிந்ததே.  சமீபத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் தெர்மோகோல் மூலம் நீர் ஆவியாவதை தடுக்க முடியும் என சொன்னதும்,  மற்றொரு அமைச்சர் மக்கள் சோப்புப் போட்டுக் குளிப்பதால் தான் நொய்யல் ஆற்றில் நுரை மிகுந்து காணப்படுவதாகவும் கூறியதற்கு நெட்டிசன்கள் இன்றுவரை விமர்சித்து வருகின்றனர்.  இது போல் குஜராத் பா ஜ க அமைச்சர் ஒருவரின் பேச்சு நமது நாடு முழுவதையுமே பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

குஜராத் மாநில பா ஜ க அமைச்சர் பாபு பொகிரியா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றினார்.  அப்போது 1947ல் சுதந்திரம் அடைந்த உடனேயே நரேந்திர மோடியை பிரதமராக்க காங்கிரஸ் மிகவும் விரும்பியது என தெரிவித்தார்.  இந்த பேச்சு கூடியிருந்தோரை மட்டுமின்றி பா ஜ க வின் தலைவர்கள் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.   குஜராத் மக்களில் பலர் அவரது இந்த கருத்தை கிண்டல் செய்து இணைய தளங்களில் பதிந்து வருகின்றனர்.

தற்போது அமைச்சர் பொகிரியா தாம் சொல்ல நினைத்தது சர்தார் வல்லப் பாய் படேல் என்றும், வாய் தவறி நரேந்திர மோடி என சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.