நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கந்துவட்டி கொடுமையால், குடும்பமே தீவைத்து எரிந்துபோனது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னொருபுறம் அக்காட்சிகளை படமெடுத்த பத்திரிகையாளர்களை சமூகவலைதளங்களில் வசைபாடுவதும் நடக்கிறது. அதே நேரம், அங்கு எரிந்தவர்களை காப்பாற்ற பத்திரிகையாளர்கள் முயன்ற படங்கள் வளியாகி இந்த சர்ச்சை அடங்கியது.

இந்த சூழலில் மூத்த பத்திரிகையாளர் கோவிந்தராஜன் அவர்கள், ஒரு கொடூர நிகழ்வை தனது முகநூலில் பதிந்திருக்கிறார்.

“1997ம் ஆண்டு நடைபெற்ற கோவை கலவரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த பெரும் கலவரத்தின் போது அரசு மருத்துவமனை வளாகத்தில் உயிருக்கு பயந்து நாங்கள் (பத்திரிகையாளர்கள்) சுவரோரத்தில் பதுங்கி நின்று நடந்த கொடூரங்களுக்கு மவுன சாட்சியாக இருந்தோம்.

அப்போது, வன்முறை கும்பலால் ஒருவர் தாக்கப்பட்டு வீழ… அவர் ஒருவர் மீது, காவல்துறையின் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டியூபை பிடிங்கி, ஒரு பாட்டிலில் பெட்ரோலைப் பிடித்து, அவர் மீது ஊற்றி தீ வைத்தது ஒரு கும்பல்.

 

உடல் முழுவதும் காயங்களுடன், தலையில் பற்றிய தீ எரிய, அந்த நபர் எழுந்து அமர்ந்தார். அவரைக் காப்பாற்ற வந்த மருத்துவர் குழுவிற்கு வன்முறை கும்பல் மிரட்டல் விடுத்தது. வேறு வழியின்றி அவர்கள் திரும்பிச் சென்றனர்.

தலைப்பகுதியில் தீ எரிய, உட்கார்ந்த நிலையில் இருந்தார் அந்த காயம்பட்ட நபர்.  அந்த நபரை, காலுக்கு கீழே கேமராவை வைத்து, வன்முறைக் கும்பலுக்குத் தெரியாமல் படம் எடுத்தார் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ் புகைப்படக்காரர் ஓம்பிரகாஷ்,  . அந்தப் படம், வன்முறையின் கொடூரத்தை உலகுக்கு எடுத்துக்காட்டியது.

ஆனால் படம் எடுத்த நேரத்தில் கலவரக்காரர்கள் பார்த்திருந்தால், அந்த புகைப்படக்காரர் உயிர் தப்பியிருக்காது.