இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (24/10/2017) – II
1. மத்திய சாலைத்துறை அமைச்சகத்தின் பாரத்மாலா திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைப் பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தற்போதுள்ள 40000 கிமீ தூரம் உள்ள நெடுஞ்சாலைகள் விரிவாக்கப்படும். மேலும் 28400 கிமீ தூரத்துக்கு புதிய நெடுஞ்சாலை அமைக்கப்படும். இந்த திட்டம் வரும் ஐந்து ஆண்டுகளில் முடிவடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.
2. பிரதமரின் திட்டமான மேக் இன் இந்தியா திட்டத்தின் எதிரொலியாக டெஸ்லா கார் நிறுவனம் தனது தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்காமல் சீனாவில் உள்ள ஷங்காய் நகரில் தொடங்க உள்ளதாக வால் ஸ்டிரீட் ஜெனரல் பத்திரிகை தெரிவித்துள்ளது. முன்னதாக டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலையை இந்தியாவில் துவங்க வேண்டும் என்பதற்காக இந்தியப் பிரதமர் மோடி, போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் இந்த நிறுவனத்துக்கு பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
3. குஜராத்தின் புகழ் பெற்ற பால் நிறுவனமான அமுல் தனது அமுல் வெண்ணெயை நாடெங்கும் எடுத்துச் செல்ல இந்திய ரெயில்வே குளிர்பதனம் செய்யப்பட்ட பார்சல் வேன்களை அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இந்தச் செய்தி இந்திய ரெயில்வேயின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு குளிர்பதனம் செய்யப்பட்ட பார்சல் வேன்களை இந்திய ரெயில்வே அறிமுகப் படுத்திய பின் அதற்கு கிடைத்துள்ள பெரிய ஆர்டர்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
4. இந்திய ரெயில்வே இரண்டடுக்கு ரெயில் பாதை திட்டத்தை தனது மும்பை, டில்லி மற்றும் பெங்களூரு ரெயில் நிலையங்களில் உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது பாதுகாப்புக்காகவும், நெரிசலை தவிர்ககவும் உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மும்பையில் ஆரம்பிக்கப்பட உள்ள இந்த திட்டம் இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.25000 கோடி செலவில் முடியும் என சொல்லப்படுகிறது. டில்லியில் இந்த திட்டம் நிறைவேற்ற தேவையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெங்களூருவில் இத்திட்டம் எப்போது ஆரம்பிக்கப்படும் என்பது விரைவில் முடிவு செய்யப்படும்.