சென்னை:
தமிழக அரசு நடத்திய டெங்கு ஒழிப்பு தின கூட்டத்தில் இருந்தது சிவப்பு நிற பேனர்தான் என்றும், அதை காவி நிறம் என்பவர்கள் கண்களில் கோளாறு உடையவர்கள் என்றும் தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா ஆட்சிகாலத்தைப் பொறுத்தவரை தமிழக அரசு விழாக்களில் பச்சை நிறமே மின்னும். பேனர்கள், திரைச்சீலைகள், பூங்கொத்துகள் எல்லாமும் பச்சை நிறத்தில் வைக்கப்படும். இந்த ஏற்பாடுகளைச் செய்யும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் “பச்சை நிற” விசயத்தில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
கடந்த ஆறு வருடங்களாக இப்படி பச்சையே ஒளிர்ந்து வந்தது. ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் காலத்திலும் பச்சை வண்ணமே அரசு விழாக்களில் இடம் பிடித்து வந்தது.
அவருக்குப் பிறகு முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகும் இதே நிலை தொடர்ந்தது.
இந்தநிலையில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை சார்பில் டெங்கு ஒழிப்பு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. மேலும் வாரம்தோறும் வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்காக அந்தத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைத்தும் பச்சை நிறத்துக்குப் பதிலாக காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தன. மேலும், தமிழகத்தின் அடுத்த ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவியேற்பு விழாவுக்காகத் தமிழக அரசு சார்பில் பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்ட வாகனங்களுக்கான அனுமதிச் சீட்டும் காவி நிறப் பின்னணியிலேயே வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கெனவே மத்திய பாஜக அரசுக்கு எடுபிடியாக இருக்கிறது தமிழக அரசு என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையில், இந்த காவி நிற மாற்றம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “பார்ப்பவர்கள் கண்ணில் கோளாறு இருப்பதாலேயே சிவுப்பு நிறம் காவி நிறமாக தெரிகிறது” என்று காட்டத்துடன் விளக்கம் அளித்துள்ளார்.