அகமதாபாத்

பணமதிப்பு குறைப்பு நடவடிக்கையால் குஜராத் கூட்டுறவு வங்கிகள் ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்களாக 50000 கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்துள்ளன.

கடந்த நவம்பர் மாதம் 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என அறிவிக்கப்பட்டது.  அந்த நோட்டுக்களை வைத்திருந்தோர் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொண்டனர்.  வங்கிகள் அப்படிப் பெற்ற நோட்டுக்களை ரிசர்வ் வங்கியிடம் கொடுத்து மாற்றிக் கொள்ள 2017 மார்ச் வரை கெடு விதித்திருந்தது.

அதன்படி குஜராத் கூட்டுறவு வங்கிகள் தங்களிடம் இருந்த செல்லாத நோட்டுக்களை மாற்றி உள்ளன.  மொத்தம் மாற்றப்பட்ட தொகை ரூ.50,715 கோடி ரூபாய்கள் ஆகும்.  இதுவரை கூட்டுறவு வங்கிகளில் இவ்வளவு தொகை டிபாசிட் செய்தது இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

கூட்டுறவு வங்கிகள் சம்மேளனத் தலைவர் ஜோதிந்திர மேத்தா, “கடந்த நவம்பர் மாதம் பிரதமர் 500 மற்றும் ரூ 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்று மாற்றிச் சென்றனர்.  இதனால் கூட்டுறவு வங்கிகளில் டிபாசிட் செய்யப்படும் தொகை அதிகரித்தது. இதுவரை அதிகபட்சமாக ரூ.40,813 கோடிகள் வருடம் முழுவதும் டிபாசிட் செய்யப்பட்டு வந்த நிலையில் இரண்டே மாதங்களில் இவ்வளவு தொகை டிபாசிட் செய்யப்பட்டது கூட்டுறவு வங்கிகளின் வரலாற்றிலேயே முதல் முறை ஆகும்” என தெரிவித்துள்ளார்.