ஆங்கில தொலைக்காட்சிகள் இரண்டிற்கு நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இது குறித்து மூத்தபத்திரிகையாளர் குமரேசன் எழுப்பியிருக்கும் கேள்விகள். அவரது முகநூல் பக்கத்தில் இருந்து..
“முதலமைச்சராகத் தயாராகிக்கொண்டிருக்கிற கமல்ஹாசனுக்கு அப்படிக் கனவு காணும் உரிமையை அங்கீகரித்து, அவர் ‘டைம்ஸ் நவ்’, ‘இந்தியா டுடே’ தொலைக்காட்சிகளுக்கு அளித்த பேட்டிகளில் கூறியுள்ளவை பற்றிக் கேள்வி கேட்கும் உரிமையில் இதையெல்லாம் கேட்டுவைக்கிறேன்:
“மற்ற அரசியல்வாதிகள் வாக்குறுதி மட்டும் அளித்தார்கள். பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்குறுதியைச் செயல்படுத்த முயற்சியாவது செய்கிறார்” என்கிறீர்கள். என்ன வாக்குறுதிகள் அவர் அளித்தார், என்ன முயற்சி செய்தார் என்று சொல்வீர்களா? உங்களுக்குத் தேவைப்படுமானால் அவர் அளித்த வாக்குறுதிகளின் பட்டியலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.
“ஸ்வச் பாரத் ஒரு நல்ல திட்டம், டீமானிடிசேசன் ஒரு நல்ல திட்டம்” என்று பாராட்டியிருக்கிறீர்கள். பாரதம் உண்மையாகவே ஸ்வச்சாயிடுச்சா? துடைப்பங்களோடு தலைவர்மார்களும் தொழிலதிபர்களும் திரைப்பட நட்சத்திரங்களும் படமெடுத்துக்கொள்வதற்கு அப்பால் அது என்ன செய்திருக்கிறது? என்றோ ஒருநாள் அவர்கள் துடைப்பம் பிடித்துப் படமெடுத்துக்கொள்வது போக, அதே நாளிலும் ஆண்டின் மற்ற எல்லா நாட்களிலும் தெருக்களையும் கழிப்பறைகளையும் சாலைநடுவில் இருக்கிற மலக்குழிகளையும் ஸ்வச்சுவது யார் கமல் சார்?
டீ மானிடிசேசன் என்ற செல்லாக்காசு நடவடிக்கை “தோல்வி என்று நிரூபிக்கப்படும் வரையில் (அது சரியான திட்டமா தவறான திட்டமா என்ற) முடிவுகளுக்குள் குதிக்க வேண்டாம்” என்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியானால் அது வெற்றி என நிரூபிக்கப்படும் வரையில் நீங்கள் அது நல்ல திட்டம் என்ற முடிவுக்குள் ஏன் குதித்தீர்கள்?
பசுப்பாதுகாப்புப் படைகள் பற்றிய உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, “மக்களின் பாதுகாப்பு பற்றிதான் நான் கூடுதலாக அக்கறைப்படுகிறேன். ஆனால் அதுவல்ல மேட்டர்… நாம் பசுக்களிடமும் நாய்களிடமும் அன்பாக இருக்க வேண்டும், அவை எனக்குப் புனிதமானவை… நான் மனிதர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறேன்,” என்று செய்யுள் போலப் பதிலளித்திருக்கிறீர்கள். செய்யுளுக்குப் பதவுரை, பொழிப்புரை எப்போது சொல்வீர்கள்? அல்லது உங்கள் பாணி புதுக்கவிதைகளுக்குப் பதவுரை பொழிப்புரையெல்லாம் கிடையாதோ?
“அச்சே தின் வந்துவிட்டதா என்பது பற்றி முரண்பட்ட கருத்துகள் இருக்கின்றன, பொருளாதார அறிஞர்கள் அதைச் சொல்கிறபோது நான் நம்புகிறேன்,” என்று பகர்ந்திருக்கிறீர்கள். தொலைக்காட்சி நெறியாளுநர் கேட்டது உங்கள் கருத்தைத்தானே? அது என்னவோ?
பாஜக ஆட்சியில் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் முடக்கப்படுவது பற்றி ராகுல் காந்தி பேசியிருப்பது பற்றிய கேள்விக்கு, “எமர்ஜென்சி பற்றி அவருக்குத் தெரியுமா?” என்று கேட்டிருக்கிறீர்கள். ஓகே. ஆனால், “விமர்சனங்களை சகித்துக் கொள்வது என்பது கிட்டத்தட்ட எல்லாக் கட்சிகளிலும் இல்லாத ஒன்றுதான், உடனே வசைமாரி பொழிய ஆரம்பித்துவிடுகிறார்கள்,” என்பதாக மொழிந்திருக்கிறீர்களே? இந்த ஆட்சியில் கருத்துச்சுதந்திரம் நசுக்கப்படுகிறதா இல்லையா என்பதற்குக் கூட நேரடியாகவும் சுதந்திரமாகவும் கருத்துச் சொல்ல மாட்டீர்களா?
வெறுப்பு அரசியல் பற்றி கேட்கப்பட்டதற்குக் கூட, “எந்தக் கட்சி வெறுப்பைப் பரப்பினாலும் அல்லது ஒரு மோதலுக்காக ஆத்திரமூட்டினாலும் அது சரியான பாதை அல்ல,” என்று இதைவிட மேம்போக்காக யாரும் சொல்ல முடியுமா என்று யோசிக்கிற அளவுக்குச் சொல்லியிருக்கிறீர்கள். அதோடு போகட்டும் என்று பார்த்தால், ”வெறுப்பைப் பரப்பக்கூடாது என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததற்குப் பலரும செவிமடுக்கவில்லை என்பது எனககு ஏமாற்றமாக இருக்கிறது. மக்கள் மோடிக்கு கால அவகாசம் தர வேண்டும்,” என்றும் கூறியிருக்கிறீர்கள். வெறுப்பு வளர்ப்பையே அரசியல் முதலீடாகக் கொண்ட ஒரு கட்சியின் ஆட்சி, அதன் தலைவர் இப்படி வேண்டுகோள் விடுத்ததில் உண்மை இருக்கிறதா? இருப்பதாக நீங்கள் நம்புகிறீர்களா? நம்பச் சொல்கிறீர்களா?
“என்னுடைய வண்ணம் கறுப்புதான். அது காவியையும் உள்ளடக்கியதுதான்” என்று அறிவித்திருக்கிறீர்கள். கறுப்புத் துணியில் காவி வண்ணம் பூசினால் பளிச்செனத் துருத்திக்கொண்டு தெரியும் உலக நாயகரே.
விஜய் டிவி நிகழ்ச்சியில் நீங்கள் பிக் பாஸ் என்றிருக்கலாம். நாட்டின் அரசியல், சமூக, பொருளதார, பண்பாட்டுக் களங்களில் மிகப்பெரிய தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கிறபோது, அவற்றிற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் வலுப்பெற வேண்டியிருக்கிற நிலையில், பிக் மெனாஸ் என்றாகிவிடாதீர்கள்” என்று குமரேசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.