சேலம்,
சேலம் மாவட்டம் நாமக்கல் அருகே நடைபெற்ற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய துணைமுதல்வர் ஓ.பி.எஸ் சசிகலாவின் ரகசியங்களை வெளியிடுவேன் என்று கூறினார்.
நாமக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ஓபிஎஸ், ஏற்கனவே சசிகலா குடும்பத்தை பற்றி 10 சதவிகித தகவல்களை தெரிவித்துள்ளேன். தற்போது ஒரு சதவிகிதம் கூறி உள்ளேன். மீதமுள்ள 89 சதவிகித தகவல்களை விரைவில் வெளியிடுவேன் என்று டிடிவி தினகரனுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், தமிழகம் ஒரு குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மீள வேண்டும் என்றுதான் திமுகவுக்கு எதிராக மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். குரல் கொடுத்தார். ஆனால் அவரை தொடக்கத்தில் ஒரு சாதாரண பந்து என்று நினைத்தார்கள். ஆனால், அந்த பந்து வெடிகுண்டாக வெடித்தது. பின்னர் அவர் தலைமையில்தான் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி அமைந்தது.
அதைத்தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்தினார். அவருக்கு எதிராக செயல்பட்டவர்களையும், அவர்களின் சதிகளையும், சதிகளையும், சூழ்ச்சிகளையும் முறியடித்து சிறப்பான முறையில் ஆட்சி நடத்தினார்.
தற்போது எடப்பாடி தலைமையில் அம்மாவின் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ஆட்சி தொடரக்கூடாது என்று சிலர் சதி திட்டம் தீட்டுகிறார்கள். அவர்களின் திட்டம் தவிடு பொடியாகும். அதற்கான ஆற்றல் தொண்டர்களிடம் உள்ளது.
கட்சிக்கும், ஆட்சிக்கும் எதிராக செயல்படும் துரோகிகளை எப்படி எதிர்கொள்வது என ஜெயலலிதா எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளார். ஆகவே எங்களுக்கு அதை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும். அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது. அது ஒரு மலை. மலையோடு மோதினால், மோதுபவர்களின் தலைதான் சிதறும் என்பதை எச்சரிக்கையாக கூறிக்கொள்கிறேன்.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், இன்று தி.மு.க.வோடு கூட்டணி சேர்ந்து கொண்டு ஆட்சியை கலைக்க பார்க்கிறார்கள்.அதன்மூலம் தமிழகத்தில் மீண்டும் குடும்ப ஆட்சியை கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள். அதற்காக ஏற்கனவெ குடும்ப ஆட்சி நடத்தியவர்களுடன் கூட்டணி அமைக்க மறைமுகமாக முயற்சித்து
ஜெயலலிதா இல்லாத ஆட்சி தானே என சிலர் துள்ளி விளையாட நினைக்கின் றனர். இந்த நினைப்பு உள்ளவர்களும் தமிழக மக்களின் துணையோடு கிள்ளி எறியப்படுவார்கள்.
ஆட்சியும், கட்சியும் ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திற்கு சென்றுவிடாமல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பார்த்துக்கொண்டனர். அதை நாங்கள் செய்வதால் இந்த ஆட்சியை கவிழ்க்க பார்க்கிறார்கள். அ.தி.மு.க. என்ற கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்திற்குள் சென்றுவிடக்கூடாது என்பதால்தான் நாங்கள் மீண்டும் ஒன்றிணைந்து செயலாற்றுகிறோம்.
நானும், எடப்பாடி பழனிசாமியும் சாதாரண நிலையில் இருந்து தான் இந்த நிலைக்கு உயர்ந்து உள்ளோம். எங்களை பார்த்து சுயநலத்திற்காக இணைந்துள்ளதாக கூறுகிறார்கள். எங்களுக்கு பதவி பெரிதல்ல.
தற்போது ஆட்சியையும, கட்சியையும் கைப்பற்ற முயற்சி செய்பவர்கள், ஜெயலலிதாவுக்கு துரோக செயல்களை செய்தவர்கள். அவர்கள் உண்மையானவர்கள் இல்லை. எனவேதான் 2014-ம் ஆண்டில் அந்த குடும்பத்தை சேர்ந்த 16 பேரை கட்சியில் இருந்து ஜெயலலிதா அதிரடியாக நீக்கினார்.
அப்போது, அம்மா என்னை அழைத்து, தினகரனுடன் பேசக்கூடாது என்றும், தான் உயிரோடு இருக்கும் வரை அவரை வீட்டிற்குள் விடமாட்டேன் என ஒவ்வொரு முறையும் என்னை அழைத்து கூறினார்கள்.
நான் ஏற்கனவே சசிகலா குடும்பம் குறித்து 10 சதவிகித ரகசியத்தை சொல்லி உள்ளேன். தற்போது கூறி உள்ளது 1 சதவிகிதம். இன்னும் 89 சதவிகித ரகசியங்கள் பாக்கி உள்ளது. அவர்கள் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்தால், நானும் தொடர்ந்து பல ரகசியங்களை வெளியிடு வேன். அவர்கள் பேச்சை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.