திருச்சி,

நீட்டுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்த போராட்டத்தை எதிர்த்து, தேமுதிகவை சேர்ந்த வழக்கறிஞர் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக மாணவர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்குவது கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சியில், அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், அகில இந்திய மாணவர் பெருமன்றத்தினர், கடந்த 8 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களை இன்று நேரில் சந்தித்த ஸ்டாலின் தனது ஆதரவை அவர்களுக்கு தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் மீது அடக்கு முறைகளை ஏவி, அவர்களை அச்சுறுத்தி கைது செய்வது வன்மையாக கண்டிக்கும் செயல் என்று அவர் கண்டனம் தெரிவித்தார்.