
மெல்பர்ன்
ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு இனப்படுகொலை வாதி என சசி தரூர் குறிப்பிட்டதற்கு பார்வையாளர்கள் பாராட்டி உள்ளனர்.
ஆஸ்திரேலியா தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய கேள்வி பதில் நிகழ்ச்சியில் பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர் சசி தரூர் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். அதில் சசி தரூர் சர்வதேச தலைவர்கள் பற்றிய தனது கருத்தை தெரிவித்தார்.
அவர் கூறியதாவது :
”வட கொரியாவின் அணுகுண்டு சோதனைகள் அச்சமூட்டுபவையாக உள்ளன. அவர்களின் இந்த சோதனைகளுக்கு முக்கிய காரணம் சர்வதேச நாடுகளில் உள்ள இனப்பாகுபாடு சட்டமே காரணம். வட கொரியாவின் கிம் ஜாங் உன் தனது மக்களை வறுமையிலும் துயரிலும் ஆழ்த்த என்னென்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்து வருகிறார். டொனால்ட் ட்ரம்ப்பை மிரட்ட அவர் அணுகுண்டு சோதனையை கையில் எடுத்துள்ளார். சதாம் உசைனுக்கு ஏற்பட்ட விளைவை அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.

வின்ஸ்டன் சர்ச்சில் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற உதவியதாக புகழப்படுகிறார். உலகப்போர் நிகழ்ந்த போது உணவுப் பஞ்சத்தில் இருந்த இந்தியாவில் இருந்து கப்பல், கப்பலாக கோதுமையை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தார். இந்தியாவும் அப்போது அவர் ஆட்சியின் கீழ் இருந்தது. அவர் இந்தியாவின் பஞ்சத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை.
வங்காளத்தில் இனப் படுகொலை நிகழ முக்கிய காரணம் சர்ச்சில்தான். அவர் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்த போது அவருடைய கைகளில் இந்தியர்களின் இரத்தக் கறை தான் இருந்தது. பல விதத்திலும் இந்தியாவை சுரண்டி விட்டு சர்ச்சில் சுதந்திரம் அளித்தார். அப்போது இந்தியா ஒரு பஞ்சத்தில் வாழும் ஏழைக் குழந்தையாகத்தான் இருந்தது. அதற்கு தான் காரணம் இல்லை எனவும், இந்தியா தான் தொழில் புரட்சி என்னும் வாகனத்தில் ஏறவில்லை எனவும் சர்ச்சில் கூறினார். ஆனால் உண்மையில் இந்தியாவை அந்த வாகனத்தில் ஏற விடாதவரும் அவர்தான். அது மட்டுமல்ல அந்த வாகனத்தின் சக்கரத்தின் கீழ் தள்ளிவிட்டவரும் சர்ச்சில் தான். “ எனக் கூறினார்.
அவர் சர்ச்சிலைப் பற்றி தெரிவித்த கருத்துக்களுக்கு ஒவ்வொரு வரிக்கும் எழுந்த கைத்தட்டலால் அரங்கமே அதிர்ந்தது.