சான்பிரான்சிஸ்கோ,
அமெரிக்கா கலிபோர்னியா மாவட்டத்தில் உள்ள சிலிக்கான் வேலி பகுதியில், நீட் எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவுக்காக அஞ்சலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வு காரணமாக 1176 மதிப்பெண் பெற்ற, மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காததால், அனிதா பரிதாபமாக தற்கொலை செய்துகொண்டனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தற்கொலை மற்றும் நீட் தேர்வுக்கு அமெரிக்கா வாழ் தமிழர்களும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலி பகுதியில், மறைந்த அனிதாவுக்காக அஞ்சலி செலுத்தி யும், நீட் தேர்வை விலக்கக் கோரியும் போராட்டம் நடைபெற்றது. மேலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளிலும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.
நேற்று மாலை 6:30 மணிக்கு கலிபோர்னியா மாநிலம் சான்பிரான்சிஸ்கோ அருகில் உள்ள பிரிமான்ட் நகரில் மறைந்த மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தவும் மற்றும் நீட் தேர்விற்கு எதிரான ஆர்பாட்டம் நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து சுமார் 200க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குடும்பத்துடன் இந்த போராட்டத்திற்காக பிரிமான்ட் நகரில் குவிந்தனர்.
அவர்கள் கைகளில், நீட் தேர்விற்கு எதிரான பதாகைகளை வைத்திருந்ததோடு, நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்களையும் எழுப்பினர்.
அதைத்தொடர்ந்து மறைந்த மாணவி அனிதாவிற்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அனிதா மரணத்திற்கு அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அதை தொடர்ந்து நீட் தேர்விற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றியும், நீட் தேர்வினால் எவ்வாறு தமிழகத்தின் வருங்காலமே பாதிக்கப்படவுள்ளது என்பது பற்றியும் விளக்கி பேசினர். நீட் எவ்வாறு சமூக நீதிக்கு எதிரானது என்பது பற்றியும் விளக்கும் துண்டறிக்கையும் வினியோகிக்கப் பட்டது.
இந்த போராட்டத்தில் தமிழர்களுடன் இந்தியாவை சேர்ந்த மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு நீட்டுக்கு எதிராக கோஷமிட்டும், மறைந்த அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தியதும் அங்குள்ள தமிழர்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது.
தமிழகத்தை சேர்ந்த மாணவியின் சாவுக்கு தமிழகத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க அரசு மறுத்துவரும் நிலையில், அண்டை நாடான அமெரிக்காவில் தமிழர்கள் போராட்டம் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.