பாட்னா:
பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 9 லட்சம் லிட்டர் சாராயம் குடித்த எலிகள் தற்போது வெள்ள பாதிப்புக்கும் காரணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி 514 பேர் இறந்துள்ளனர். 19 மாவட்டங்களை சேர்ந்த 1.71 கோடி மக்கள் பாதித்துள்ளனர். மீட்டு பணிகளும், நிவாரணப் பணிகளும் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த கடுமையா வெள்ள பாதிப்புக்கு எலிகள் தான் காரணம் என்று 2 அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநில நீர்வளத் துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் கூறுகையில், ‘‘கம்பபாலன் ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டதால் தான் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கரை பகுதி பலவீனமடைய எலிகள் தான் காரணம்.
இந்த ஆற்றங்கரை பகுதியில் உள்ள மக்கள் தானியங்களை, ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் சேகரித்து வைத்துள்ளனர். தானியங்களை சாப்பிடுவதற்காக எலிகள் கரைகளில் அதிகளவில் ஓட்டைகளை போட் டுள்ளன. இதனால் கரை பலவீனமடைந்து வெள்ளத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல் உடைத்துக் கொண்டது’’ என்றார்.
இதேபோல் பீகார் சிறுபாசன மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் தினேஷ் சந்திரா யாதவ் கூறுகையில், ‘‘ஆற்றங்கரை பலவீனமடைய எலிகள் முக்கிய காரணமாக உள்ளது. வெள்ளத்திற்கு அவைகள் தான் காரணம். எலிகளுக்கும், கொசுக்களுக்கும் தீர்வே இல்லாத நிலை உள்ளது’’ என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் பீகாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கள்ளத்தனமாக விற்பனை செய்யப்பட்ட மற்றும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9 லட்சம் லிட்டர் மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த மதுபானங்கள் மாயமானது. இது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது மதுபானத்தை எலிகள் குடித்துவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு மது குடித்த எலிகள் தற்போது வெள்ளப் பெருக்கு ஏற்படவும் காரணமாக இருந்த விநோதம் பீகாரில் நடந்துள்ளது.