நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாத விரக்தியில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மாணவி அனிதாவின் தற்கொலை முடிவு தவறான ஒன்று என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மேலும், அனிதா ஏன் செத்தார் என்பதை விசாரிக்க வேண்டும் ,இந்த மர்ம சாவை ஏன் நீட்டோடு ஒப்பிடவேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். தவிர,தற்கொலைக்கான காரணம் தெரியாமலேயே அது வேறு ஒன்றுடன் முடிச்சுப்போடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது இந்த கருத்து குறித்து மேலும் விளக்கம் அறிய அவரைத் தொடர்புகொண்டோம். அவர், தற்போது பேச இயலாது. மீண்டும் பேசுவோம் என்றார்.
பிறகு நம்மை தொடர்புகொண்ட அவர், “அனிதாவின் மரணம் மிகவும் வேதனைப்படுத்துகிறது. எந்தக் காரணம் கொண்டும் அவரது மரணத்தை நியாயப்டுத்த முடியாது.
அதே நேரம் எதார்த்தத்தை, நிஜ சூழலை நாம் புரிந்துகொள்வது அவசியம். நீண்ட காலமாகவே… பத்து பன்னிரண்டு வகுப்பில் தேர்ச்சி பெற வில்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இது அந்த குழந்தைகளின் தனிப்பட்ட மனநிலையின் வெளிப்பாடுதான்.
இதை நாம் உணர வேண்டும்.
இந்த முறை மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டதாலேயே அந்த பெண்ணுக்கு எல்லாமே முடிந்துபோய்விட்டது என்று அர்த்தமில்லை. அடுத்த முறை கிடைக்கலாம். உலக அளவு விளையாட்டு வீரர்கள்கூட, ப லமுறை தோல்வி கிடைத்த பிறகே வென்றிருக்கிறார்கள் பதக்கம் பெற்றிருக்கிறார்கள்.
ஆகவே இந்த மாணவிக்கும் நம்பிக்கை ஊட்டியிருக்க வேண்டும். ஆனால், அவரது வாழ்க்கையே போய்விட்டது என்பது போல பயப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்டார்” என்றார்.
கேள்வி: மாநில அமைச்சர்கள் நீட்டிலிருந்து விலக்கு கிடைத்துவிடும் என்றார்கள். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இந்த முறை நீட்டிலிருந்து விலக்கு கிடைக்கும் என்றார்.. இதெல்லாம் குழப்பத்தை ஏற்படுத்தியதே..
பதில்: ஊடகங்களும் பல அரசியல்கட்சிகளும் வெறும் உணர்ச்சிகளை மட்டும் தூண்டுவருகின்றன. அரசியல்வாதிகள் சென்னதை நம்பியிருக்கக்கூடாது.
கேள்வி: மத்திய, மாநில அமைச்சர்களை வெறும் அரசியல்வாதிகள் என்கிற வரையரைக்குள் அடைத்துவிட முடியுமா. பொறுப்பில் இருப்பவர்கள் பேசுவதை நம்பித்தானே ஆக வேண்டும்?
பதில்: ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். நீட் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. 2010 முதல் இருக்கிறது. கடந்த வருடம் மட்டும் தமிழகத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டது. இந்த வருடம் கட்டாயம் உண்டு என்றும் கூறப்பட்டது. இதெல்லாம் அந்த மாணவிக்குத் தெரிந்திருக்கும். பிறகு ஏன் இந்த தவறான முடிவு. .
இன்னொரு விசயம்.. நிர்மலா சீதாராமன் கோவையில் இந்த முறை நீட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் என்று கூறிய போது நான் கண்டித்தேன். அனைத்திந்தி மருத்துவ கவுன்சில், நீட் உண்டு என தீர்மானமாகச் சொல்லிவிட்டது. அதைத்தான் நாம் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.
கேள்வி: நீட் குறித்து தனக்குத் தெரியவில்லை என்று அந்த மாணவி எழுதிய மாணவியின் கடிதத்தில் இருக்கிறதே..
பதில்: அவர் மிக ஏழை, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதே நேரம், இங்கிருந்து டில்லிக்கு சென்று வழக்கு போடும் அளவுக்கு தைரியம் உள்ளவர். அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பதுதான் எனக்கு வருத்தம். இதற்குக் காரணம், தனி மனித மனோநிலை என்கிறேன்.
உணர்ச்சிவசப்படாமல் சிந்தியுங்கள். நல்ல மதிப்பெண் பெற்றும் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்காத பலர் உண்டு. அவர்கள் எல்லாம் ஏன் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் ன்று யோசிக்க வேண்டும்.
நம் குடும்பத்து சிறுவர் சிறுமிகளுக்கு வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான மன உறுதியை கற்றுக்கொடுங்கள். பல சிறுவர்கள் சின்ன தோல்விகளைக் கூட எதிர்கொள்ள முடியாதவர்களாக உருவாகிக்கொண்டிருக்கிறார்கள். இதை மாற்றுவதில் குடும்ப சூழல்தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர வேண்டும்.
இன்னொன்றும் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.
இட ஒதுக்கீடே வேண்டாம். படிக்கும் சிறுவர்களுக்கு இலவச, செருப்பு புக் எதுவும் வேண்டாம். நல்ல தரமான கல்வி கொடுத்தால் போதும். அனைவரும் நன்கு படித்து முன்னேறுவார்கள்.
அதைவிடுத்து ஏதேதோ பேசுவது பலன் அளிக்காது.”