சென்னை
இண்டர்நெட் வசதி இல்லாதவர்கள் ரூ.20 செலுத்தி மொபைல் ஆப் மூலம் போலீசுக்கு புகார் அளிக்கலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.
காவல்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
தமிழ்நாடு காவல்துறைக்கு இணையதளம் மூலம் புகார் அளிக்க http://eservices.tnpolice.gov.in என்னும் இணையதளம் உள்ளது. இந்த இணைய தளத்தில் காவல்துறைக்கு புகார் அளிக்க, முதல் தகவல் அறிக்கையை தரவிறக்கம் செய்துக்கொள்ள, அந்த அறிக்கையின் தற்போதைய நிலையை அறிந்துக் கொள்ள, போன்ற பலவற்றுக்கும் இந்த தளம் கம்ப்யூட்டர் மூலம் உபயோகப்படுத்தப்படுகிறது.
ஆனால் இண்டர்நெட் வசதி இல்லாதவர்களின் வசதிக்காக தற்போது மொபைல் ஆப் ஒன்றை தமிழக போலீஸ் வடிவமைத்துள்ளது. இதை காவல்துறை வெப்சைட் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோர் மூலம் ஆண்டிராய்டு கைபேசிகளில் தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இந்த ஆப் மூலம் போலீசுக்கு ரூ.20 கட்டணத்தில் உடனடியாக புகார் அளிக்க முடியும். அந்த புகாரின் நிலையை அறிந்துக் கொள்ள ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும்.
இது தவிர பழைய கார்களை வாங்க விரும்புபவர்கள் அதன் பதிவு எண்ணைக் கொண்டு காவல்துறையிடம் இருந்து அந்த வாகனம் திருடப்பட்டதா என்பதையும், விபத்துக்களில் சம்பந்தப்பட்டவையா என்பதையும் அறிய முடியும். இது தவிர ஆன்லனில் பெறப்படும் புகார்கள் பற்றிய விவரங்கள் தேவை என கேட்போருக்கு குறும் செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த செய்திகள் இரு மொழிகளில் அதாவது தமிழிலும், ஆங்கிலத்திலும் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது