புதுக்கோட்டை:
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என் கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக நடைபெற்ற வருமான வரி சோதனையில் ஏராளமான ஆவனங்கள் கைப்பற்றப்பட்ட தாக வருமான வரித்துறை கூறியது.
அதைத்தொடர்ந்து அவரது உறவினர்களின் வீடுகள் மற்றும் இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஏராளமான ஆவனங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா விற்பனையை, தடையை மீறி விற்பனை செய்ய ரூ.40 கோடி அளவில் லஞ்சம் பெறப்பட்டதாகவும் அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், அமைச்சருக்கு சொந்தமான புதுக்கோட்டை மாவட்டம், திருவேங்கைவாசல் பகுதியில் உள்ள கல் குவாரிக்கு, வருமான வரித்துறையினரின் உத்தரவுபடி பத்திரப்பதிவு துறையினர் அதிரடியாக சீல் வைத்தனர்.
மேலும், அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, 92 ஏக்கர் நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வருமான வரித்துறை நேற்று அதிரடியாக முடக்கி உள்ளது.
இது தமிழக அரசில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சராக இருக்கும் ஒருவருடைய சொத்துக்களை மத்திய வருமான வரித்துறை முடக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக அவர் விலகலாம் என்றும், எடப்பாடியால் பதவி நீக்கப்படலாம் என மாறுபட்ட தகவல்கள் கோட்டையில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
ஆனால், அமைச்சர் விஜயபாஸ்கரோ நீட் விவகாரம் தொடர்பாக டில்லியில் முகாமிட்டு உள்ளார். தற்போது பிரதமர் மோடியை சந்தித்து பேசி வருகிறார்.