அவுரங்காபாத்:
சர்ச்சைக்குறிய வங்க தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் அவுரங்கபாத் விமான நிலையத்தில் போராட்டம் காரணமாக மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
மும்பையில் இருந்து வந்த அவர் சிக்கல் தானா விமானநிலையத்தில் நேற்று மாலை தரையிறங்கினார். அங்கிருந்து அவர் திருப்பி அனுப்பப்பட்டார். விமான நிலையத்தில் அவரை வெளியே வர போலீசார் அனுமதி மறுத்தனர். விமான நிலைய வாசலில் அவருக்கு எதிராக ஒரு குழுவினர் எதிர் கோஷம் போட குவிந்திருந்ததால் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அந்த குழுவினர் ‘‘திரும்பிச் செல்’’ என்று கோஷமிட்டதால் போலீசார் தஸ்லிமாவை விமானநிலையத்தில் இருந்து வெளியே வர அனுமதிக்கவில்லை. மேலும், தஸ்லிமா தங்க திட்டமிட்டிருந்த விடுதி முன்பும் போராட்டக்காரர்கள் குவிந்திருந்தனர்.
இதையடுத்து தனது பயண திட்டத்தை ரத்து செய்து கொண்டு அவர் திரும்ப செல்ல சம்மதித்தார். அவுரங்காபாத்தில் உள்ள உலகப் பாரம்பரியமிக்க அஜந்தா, எல்லோரா ஓவியங்களை பார்வையிட அவர் திட்டமிட்டிருந்தார். இந்த போராட்டத்திற்கு அவுரங்காபாத் மத்திய தொகுதி எம்எல்ஏ இம்தியாஸ் ஜலீல் தலைமை தாங்கியிருந்தார்.
இது குறித்து ஜலீல் கூறுகையில், ‘‘ அவரது எழுத்துக்கள் முஸ்லிம் சமுதாயத்தின் நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையில் இருந்தது. அவரது காலடி எங்களது மண்ணில் பட அனுமதிக்க மாட்டோம்’’ என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் தான் மத்திய உள்துறை அமைச்சகம் இவருக்கான விசாவை மேலும் ஓராண்டு நீடித்தது. இது கடந்த ஜூலை 23ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
நஸ்ரீன், ஸ்வீடன் குடியுரிமை பெற்றவர். கடந்த 2004ம் ஆண்டு முதல் இவர் தொடர்ந்து இந்திய விசாவை பெற்று வருகிறார். 1994ம் ஆண்டு முதல் அச்சுறுத்தல் காரணமாக இவர் வங்க தேசத்தில் இருந்து வெளியே வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.