சென்னை

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளதாவது:

“கேரளாவில் கடந்த மாதம் 30ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கியது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தக் காலத்தில், தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை என்றாலும் ஓரளவு மழை பெய்து வருகிறது.

மேற்கு திடையில் காற்றில் ஏற்பட்டுள்ள வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதே மாறுபாடு தற்போதும் தொடர்வதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு (இன்று மற்றும் நாளை) மழை பெய்ய வாய்ப்பு உண்டு.

ஆனாலும் வட தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஒருசில இடங்களிலும், தென் தமிழக்நாட்டில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரையில் சில பகுதிகளில் மட்டும் மிதமான மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 29ம் தேதி வரையில் இயல்பாக 12 செ.மீ அளவில் மழை இருக்கும். ஆனால், தற்போது 8 செ.மீ மழை தான் பெய்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.