
பெங்களூரு
பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பெங்களூரு மெட்ரோவில் இந்தி பதாகைகள் நீக்கப்படும் என மெட்ரோ நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார்.
பெங்களூரு மெட்ரோ ரெயில் நிலையங்களில் கன்னடம், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியிலும் பதாகைகள் இருப்பதற்கு பொதுமக்கள் மிகவும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல போராட்டங்கள் நடைபெற்றன. போராட்டக்காரர்களின் கோஷம் “நம்ம மெட்ரோ, ஹிந்தி பேடா” என்பதாகும்.
தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க, போராட்டக்காரர்கள் பல இடங்களில் உள்ள இந்தி எழுத்துக்களின் மேல் தார் பூசியும், அவற்றை மறைத்தும் போராடினர். இது குறித்து பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் ஒன்றும் பயனின்றி இருந்தது. கர்னாடக மாநில அரசு போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து மெட்ரோ ரெயில் நிர்வாகத்தை இந்தி பதாகைகள் அகற்ற வேண்டும் என தெரிவித்து இருந்தனர். மற்ற எல்லா மெட்ரோக்களிலும் இருமொழிகள் மட்டுமே உபயோகப்படுத்துவதையும் அரசு சுட்டிக் காட்டியது.
இதை தொடர்ந்து, மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பிரதீப் சிங் கரோலா இந்தி பதாகைகள் விரைவில் நீக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். கன்னட மொழி பாதுகாப்பு இயக்கமும், மாநில அரசும் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து இந்த நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.
ஆனால் அந்தப் பதாகைகள் எப்போது நீக்கப்படும் என தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.