டில்லி:

போர் வந்தால் இந்தியா வசமுள்ள வெடிபொருட்கள் பத்தே நாட்களில் தீர்ந்துவிடும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய எல்லையில் பாகிஸ்தானும், சீனாவும் அத்துமீறி வருவது தொடர்கதையாக இருக்கிறது. குறிப்பாக இந்தியா – பூடான் – சீனா எல்லைப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இந்தியா – சீனா போர் மூளுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் மத்திய கணக்கு தணிக்கைக் குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், ராணுவத்தில் நிலவும் ஆயுதப் பற்றாக்குறை  நிலவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 2013ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில், 50 சதவீத ஆயுதங்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, 170 வகையான ஆயுதங்களில் 85 ஆயுதங்கள், போர் நடந்தால், 10 நாட்களுக்குள்ளாகத் தீர்ந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டது.

2016 செப்டம்பர் நிலவரப்படி ராணுவத்தில் 40 சதவீத ஆயுதப் பற்றாக்குறை உள்ளதாக, நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய அறிக்கையில், “ மொத்தமுள்ள 152 வகை ஆயுதங்களில் 61 வகை ஆயுதங்கள், போர் ஏற்பட்டால் 10 நாட்களில் தீர்ந்துவிடும்.  இது கவலைக்குரிய விஷயம்.  ஆயுதப் பற்றாக்குறை காரணமாக ராணுவப் பயிற்சியின் கால அளவு குறைக்கப்பட்டுள்ளது”  என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சி.ஏ.ஜி..யின் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.