“அப்பாவைப்போல் பிள்ளை” என்பார்கள். ஆனால் பாடலாசிரியர் வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி, ஒரு விசயத்தில் அப்பாவைப்போல் இருந்துவிடாமல், உயர்ந்து நிற்கிறார்.
வைரமுத்துவை மிகச் சிறந்த பாடலாசிரியர். படைப்பாளி. அற்புதமான பேச்சாளர்.
ஆனால், அவர் மீதான விமர்சனங்களில் ஒன்று, அவர் தன் வாழ்நாளில் இதுவரை சக பாடலாசிரியர்களை பாராட்டி பேசியதே இல்லை என்பது.
அடுத்தடுத்த தலைமுறை பாடலாசிரியர்கள் வந்து சிறந்த பாடல்களை எழுதிய நிலையிலும், “பின்னால் திரும்பிப் பார்க்கிறேன்… கண்ணுக்கெட்டிய தூரம் வரை கவிஞர்களே இல்லை” என்று முழங்கியவர்தான் வைரமுத்து.
ஆனால் அவரது மகன் பாடலாசிரியர் மதன் கார்க்கி, தான் ரசிப்பதை பாராட்டும் நற்குணம் கொண்டவராக இருக்கிறார்.
அர்ஜுன் நடிக்கும் “நிபுணன்” படத்தில், “இதுவும் கடந்து போகும்” என்கிற வரிகளுடன் துவங்கும் பாடல் சமீபத்தில் வெளியானது. குறுகிய காலத்தில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது இப்பாடல்.
இந்த பாடலை பெரிதும் பாராட்டி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிந்திருக்கிறார் மதன் கார்க்கி. தான் அந்த பாடலை இயற்றவில்லை என்றாலும் மற்றொரு கவிஞரை மனமார பாராட்டுவது என்பது உயர்ந்த உள்ளத்தின் வெளிப்பாடுதானே!
இந்த பாடலை எழுதியவர் இயக்குனர் அருண் வைத்தியநாதன். அவர், “மதன் கார்க்கியின் இந்த நல்ல குணம் நெகிழ வைக்கிறது. அறிமுகம் இல்லாத ஒருவர் இயற்றிய பாடலை சக, பாடலாசிரியர் பாராட்டுவது மதன் கார்க்கியின் உயர்ந்த குணத்தை வெளிப்படுத்துகிறது” என்று நெகிழ்கிறார்.
உண்மைதான். அப்பாவின் பிம்பமே பிள்ளைகள் என்பார்கள். ஆனால் தந்தைக்கு உபதேசம் செய்த கந்தன் போல, மறைமுகமாக ஒரு நல் ஆலோசனையை வழங்கியிருக்கிறார் மதன்கார்க்கி.
வாழ்க அவரது நற்குணம்!