கேதார்நாத்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கேதார்நாத் வெள்ளப் பெருக்கை கண்ணால் கண்டவர்களில் பலர் இன்னும் மனநோயால் பாதிக்கப்பட்டு வேதனை அனுபவிக்கின்றனர்.
நான்கு ஆண்டுக்கு முன்பு 2013ஆம் வருடம் ஜுன் 16ஆம் தேதி கேதார்நாத் பகுதியில் “இமாலய சுனாமி” என அழைக்கப்படும் அந்த பெரும் வெள்ளப் பெருக்கு நிகழ்ந்தது. அந்த வெள்ளத்தில் பல கிராமங்கள், சிறு நகரங்கள் என அனைத்து இடங்களும் அடித்துக் செல்லப்பட்டு ஆறு முழுவதும் பிணங்களாய் மிதந்தன.
அந்தக் கோர காட்சியைக் கண்ட பலர் இன்னமும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாமல் தவிக்கின்றனர். இது அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினருக்கும் உயிருடன் நரகவேதனையை அனுபவிக்க வைத்துள்ளது.
உதாரணத்துக்கு, ருத்ரபிரயாக் மாவட்டத்தின் ரவுலக் என்னும் கிராமத்தை சேர்ந்த இளைஞர் பிரகலாத் சிங் சம்பவத்தன்று அங்கு இருந்துள்ளார். அவர் கிராமத்தில் இருந்து 87 கிமி தூரத்தில் உள்ள திருத்தலம் கேதார்நாத்.
திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடவும் பிரகலாத் கைக்கு கிடைத்த சில பொருட்களை பிடித்து சிறிது மேடான பகுதிக்கு நீந்திச் சென்றார். மேடு ஏறியும் அவரால் எதையும் காண முடியாத அளவு கும்மிருட்டு. மின்னல் ஒன்று மின்னியது. அவர் பிடித்து நீந்தி வந்த பொருட்கள் மனிதச் சடலங்கள். அவர் நின்றுக் கொண்டிருந்தது சடலங்களின் மேல். கூக்குரல் இட்டதுடன் அவர் மனம் செயலிழந்து போயிற்று, நான்கு ஆண்டுகளாக எதுவும் புரியாமல் தனது கிராமத்தில் உலவி வருகிறார். அவ்வப்போது தன்னை இறந்தவர்கள் அழைப்பது போல தோன்றி தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுகிறார். அவருக்குள்ள ஒரே உறவான அவர் தாயின் முழு நேரப் பணியே அவர் தற்கொலை செய்துக் கொள்ளாமல் பாதுகாப்பது தான்.
இவர் ஒருவர் மட்டும் அல்ல, பலரும் இது போல மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அங்குள்ள மருத்துவர்கள தெரிவிக்கின்றனர். குறைந்தது மாநிலம் முழுவதும் 1 கோடி மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் எனவும் அவர்களை குணப்படுத்த 8 மனநல மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர் எனவும் ஒரு தகவல் தெரிவிக்கிறது.
அடிக்கடி தற்கொலைகள் இந்த பகுதியில் நிகழ்வதும் சகஜமாகி விட்டது. இதுவும் அந்த பேரழிவைக் கண்ணால் கண்டதின் தாக்கமே என மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசு ஆவன செய்து அந்த மக்களை சகஜநிலைக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அரசு ஆவன செய்யவேண்டும் என்பதே நமது விருப்பமும்.