சென்னை,
குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரிகள் உட்பட அனைவரையும் பணியிடை நீக்கம் செய்து, விசாரணை நடத்த வேண்டும் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
குட்காவை தமிழகத்தில் விற்பனை செய்ய தமிழக அமைச்சர்களுக்கும், காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் ரூ.40 கோடி லஞ்சம் கைமாறியதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், ஆனால் தமிழக அரசு மவுனம் காத்து வருவதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.
இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,
குட்கா விற்பனைக்காக சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள ஆதாரங்கள் திடுக்கிட வைப்பதாக கூறியுள்ளார்.
இந்த முறைகேட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊழலுக்காக மக்கள் நலனை சீரழிக்க இந்த அரசு கூச்சப்படாது என்பது இதன் மூலம் தெளிவாகியிருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்கு முன்னோட்டமாக சம்பந்தப்பட்ட காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.