“ரஜினி பேசினாலும் விவாதம், பேசாவிட்டாலும் விவாதம்” என்பது தமிழகத்தின் விதிகளுள் ஒன்று. இன்றோ, ரஜினி என்ன பேசினார் என்பதே கடந்தே விவாதம் ஆகியிருக்கிறது.
தனது ரசிகர்களிடையே சமீபத்தில் பேசிய ரஜினி, “சிஸ்டமே கெட்டுக்கிடக்கு.. காத்திருங்கள், போர் வரட்டும்” என்றெல்லாம் பேச… “இந்த முறை நிச்சயம் அரசியலுக்கு வந்துவிடுவார்” என்று ரசிகர்கள் நம்பத்துவங்கினர். வழக்கம்போல் மீடியாவும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசியே பெரும் விசயமாக்கிக்கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே செய்தியாளர்கள் சிலர், பேச்சாளர் தமிழருவி மணியன், நடிகை கஸ்தூரி, விவசாய அமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு என்று பலரையும் சந்தித்து நடிகர் ரஜினி அரசியல் ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் இன்று ரஜினியை அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்தார் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜூன் சம்பத். இந்த சந்திப்பின்போது இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் இராம.இரவிக்குமார், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர், D.குருமூர்த்தி உள்ளிட்டோரும் இருந்தனர்.
சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அர்ஜூன் சம்பத், “ரஜினியிடம் அரசியலுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அரசியலுக்கு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக ரஜினி கூறினார். அதற்கான ஏற்பாடுகளை ரஜினி செய்து வருகிறார். நாட்டு மக்களுக்கு சேவை செய்வதே ரஜினியின் எண்ணம். ரஜினி சிங்கமாக, சிங்கிளாக அரசியலுக்கு வருவார். அவரது தலைமையில் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அவரை பி.ஜே.பி இயக்கவில்லை” என்று கூறினார்.
அர்ஜூன் சம்பத் கிளம்பியதும் சிறிது நேரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ரஜின். அப்போது அவர், “அர்ஜுன் சம்பத் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்தது. இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. நாங்கள் அரசியல் குறித்து பேசவில்லை” என்று கூறினார். மேலும், எம்எல்ஏ. சரவணன் பேசிய வீடியோ விவகாரம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோதும் , “அரசியல் பற்றிப் பேச விரும்பவில்லை” என்றார் ரஜினி.
இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சந்திப்பு நடத்தியவர்கள் இருவர். ஒருவர் – அர்ஜூன் சம்பத். இன்னொருவர் – ரஜினி.
இவர்களில் “அரசியல் பேசினோம்” என்கிறார் அர்ஜூன் சம்பத். “அரசியல் பேசவில்லை” என்கிறார் சம்பத்.
நாம் அர்ஜூன் சம்பத்தை தொடர்புகொண்டு ரஜினியிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்டோம்.
அதற்கு அர்ஜூன் சம்பத், “அரசியல் குறித்துத்தான் பேசினோம்” என்றார்.
“என்ன பேசினீர்கள்” என்று கேட்டோம்.
அதற்கு அர்ஜூன் சம்பத், “இந்த சிஸ்டம் கெட்டுப்போயிருக்குன்னு ரஜினி ரொம்ப வருத்தப்பட்டார். இதை மாத்தணும் என்றால் நான் ஒரு கட்சியில் சேர்வதாலோ, வாய்ஸ் கொடுக்கறதாலோ மட்டும் நடந்திடாது. தனி கட்சி உருவாக்கி, வரணும்” என்றார்.
அதோடு… “எனக்கு சி.எம். ஆகணும் அப்படிங்கிற ஆசை எல்லாம் கிடையாது. அப்படி நினைச்சிருந்தா 1996லேய வந்திருக்கலாம். இப்போ ஜெயலலிதா இறந்துட்டாங்க.. கருணாநிதி உடல் நலன் முடியாக இருக்கிறாரு. இயற்கையா ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கு. என்னைப் பொறுத்தவரை இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்பறேன். இந்த மக்கள் எனக்கு நிறைய செய்திருக்காங்க. பதிலுக்கு நான் செய்யலேன்னா எனக்கு கில்டி ஃபீலிங்கா இருக்கும்” என்றார்.
தொடர்ந்து, “இந்தியாவில் உள்ள நதிகள் அனைத்தையும் இணைக்கணும் என்பதுதான் என் விருப்பம்.. லட்சியம். ஆனா அது சாத்தியம் இல்லை. அதனால மகாநதி – கோதாவரி – கிருஷ்ணா ஆறுகளை இணைக்கணும். அப்படி இணைக்கணும்னா எனக்குன்னு எம்.பிக்கள் வேணும்” என்றார்.
நிச்சயமா ரஜினி தனி கட்சி துவங்குவார். அதுதான் அவரது பேச்சில் உறுதியாக தெரிகிறது” என்றார் அர்ஜூன் சம்பத்.
நாம், “உங்களிடம் அரசியல் பேசவில்லை என்று ரஜினி கூறுகிறாரே” என்றோம்.
அதற்கு அர்ஜூன் சம்பத், “நானும் ரஜினியும் அரசியல் மட்டுமல்ல.. ஆனாமிகமும் பேசினோம்” என்றார்.