மைசூர் ராணி திரிஷிகா கர்ப்பம் அடைந்துள்ளார் என்ற செய்தி, அப்பகுதி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிரது. “இதன் மூலம் 400 ஆண்டு கால சாபம் முடிவுக்கு வந்துவிட்டது” என்று மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், தனி சமஸ்தானமாக இருந்த மைசூர் சமஸ்தானமும் இந்தியாவுடன் சேர்க்கப்பட்டது. அந்த மன்னர்களுக்கான அதிகாரங்கள் பிடுங்கப்பட்டன.
ஆனாலும் மைசூர் அரச வாரிசுகள் மீது அப்பகுதி மக்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். இப்போதும் மைசூர் மன்னருக்கான மரியாதையை அளித்து வருகிறார்கள்.,
மன்னர் வம்சத்தை சேர்ந்த முன்னோர் ஒருவர் பெற்ற சாபத்தால், மைசூர் மகாராஜா குடும்பத்தை சேர்ந்தவர்கள் இளம் வயதில் உயிரிழந்து வந்தார்கள். அடுத்தடுத்த வாரிசுகள், தத்தெடுக்கப்படுவதே நடந்தது.
விஜயநகரப் பேரரசு மீது 1612 ம் ஆண்டு அப்போதைய மைசூரு அரசர் போர் தொடுத்தார். அப்போது விஜய நகர அரசர் திருமலை ராஜா என்பவரை மிகக் கொடூரமாகக் கொன்றார்.
இதனால், திருமலைராஜாவின் மனைவி அலமேலம்மா என்பவர் கடும் விரக்தி அடைந்து, மைசூரு ராஜவம்சம் நேரடி வாரிசுகள் இல்லாமல் போகட்டும் என்றும், மன்னர்கள் சிறு வயதிலேயே சாகட்டும் என்றும் சாபம் அளித்தார்.
இதனால் கடந்த 400 வருடங்களுக்கும் மேலாக, மைசூர் ராஜ குடும்பத்தில் இளம் வயதில் மன்னர்கள் இறப்பதும், வாரிசுகள் தத்து எடுக்கப்படுவதுமே தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது.
இந்நிலையில், மன்னர் குடும்பத்தில் கடைசியாக தத்து எடுக்கப்பட்ட யதுவீர் என்பவருக்கு, கடந்த ஆண்டு திரிஷிகா என்பவர் மணம் செய்து வைக்கப்பட்டார். (முந்தைய மன்னரின் சகோதரி மகன் இவர்.)
இதையடுத்து, ராணி திரிஷிகா தற்போது நான்கு மாத கர்ப்பமாக உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமன்றி, மைசூர் மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி உள்ளது.
நானூறு ஆண்டுகால சாபம் முடிவுக்கு வந்து, அவர் நல்ல ஆரோக்கியத்துடன் வாரிசை பெற்றெடுக்க வேண்டும் என்று மைசூர் பகுதி மக்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.